ஆம் ஆத்மீ கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பஞ்சாப் மாநிலம் ஜெய்டோ சட்டமன்றத் தொகுதி ஆம் ஆத்மீ கட்சி எம்எல்ஏ மாஸ்டர் பல்தேவ் சிங் தனது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் எழுதியுள்ளார்.
எம்எல்ஏ மாஸ்டர் பல்தேவ் சிங், டெல்லி முதல்வருக்கு எழுதிய அந்த கடிதத்தில், ”ஆம் ஆத்மீ கட்சி தலைமை, தனது அடிப்படை சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை முற்றிலும் விட்டுக்கொடுத்துவிட்டது. பஞ்சாப் மாநிலத்தின் நதி நீர் பிரச்சனையில் கெஜ்ரிவால் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்வாதிகார நடவடிக்கைகளால் தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் தலித் மக்களுக்கு விரோதமானவர் என்றும் அந்த கடிதத்தில் எம்எல்ஏ மாஸ்டர் பல்தேவ் சிங் குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக ஆம் ஆத்மீ கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.