விஷம் குடித்து உயிர் விட துணிந்த காதல் ஜோடிக்கு மருத்துவமனையில் திருமணம் நடந்தது.
ஐதராபாத் அருகே விகாராபாத் நகரைச் சேர்ந்த மோட்டார் மெக்கானிக் முகமது நவாஸ். இவரும் அதே ஊரைச் சேர்ந்த ரேஷ்மா என்பவரும் காதலர்கள். ரேஷ்மா அக்காவை முகமது நவாஸ் அண்ணன் திருமணம் செய்திருக்கிறார். அண்ணன் வீட்டுக்கு முகமது நவாசும், அக்கா வீட்டுக்கு ரேஷ்மாவும் அடிக்கடி சென்று வந்தபோது ஏற்பட்ட பழக்கம், இரண்டு பேருக்கும் நட்பாக மாறி காதலாக மலர்ந்தது. இவர்கள் காதலை தெரிந்து கொண்ட ரேஷ்மா பெற்றோர் அதிருப்தி கொண்டனர்.
ஏற்கனவே ஒரு பெண்ணை கொடுத்த குடும்பத்துக்கு, மீண்டும் ஒரு பெண்ணை கொடுக்க இயலாது என்று கூறி காதலுக்கு தடை போட்டனர். இதனால் தன்னுடைய காதல் நிறைவேறாது என்று கருதிய ரேஷ்மா, கடந்த 8ம் தேதி பூச்சி மருந்தை வாங்கிக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ரேஷ்மாவை விகாராபாத் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், விஷயமறிந்து பதறிய முகமது நவாஸ், உடனடியாக மருத்துவமனை வந்தார். ரேஷ்மா நிலை கண்டு துடித்தார். இதற்கிடையில், மருத்துவமனையில் ரேஷ்மா அனுமதிக்கப்பட்டபோது டாக்டர்களிடம் அவர் பெற்றோர் ஒப்படைத்த பூச்சிமருந்து டப்பாவை வாங்கி பார்ப்பது போல் நடித்து, காதலி குடித்தது போக மிச்சம் இருந்த பூச்சி மருந்தை தானும் குடித்து தற்கொலைக்கு நவாஸ் முயன்றார். இதனால் திகைத்துப்போன டாக்டர்களும், அவர்களுடைய உறவினர்களும் முகமது நவாஸ், ரேஷ்மா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக 2 பேரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நிலை சீரான நிலையில் முகமது நவாஸ், ரேஷ்மா காதலின் உறுதியை புரிந்து கொண்ட அவர்களுடைய பெற்றோர், இரண்டு பேருக்கும் திருமணம் (நிக்காஹ்) செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, மணமகனுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ரேஷ்மா குடும்பத்தார் வரதட்சணையாக வழங்கினர்.
ஆனால் முகமது நவாஸ் குடும்பத்தாரோ ரேஷ்மாவுக்கு 5 ஆயிரம் ரூபாய் மெகர் கொடுத்து இரண்டு பேருக்கும் மருத்துவமனையிலேயே டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சாட்சியாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் என்னும் நிக்காஹ் நடத்தி வைத்து வாழ்த்தினர். இந்த திருமணம் ஒரு நெகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தியுள்ளது.