இந்திய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ள அவுஸ்திரேலியா!

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 289 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது

சிட்னி மைதானத்தில் தொடங்கியுள்ள இப்போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்க வீரா்களாக களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 6 ரன்களிலும், அலெக்ஸ் ஹேரி 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தனா்.

அடுத்ததாக களம் இறங்கிய உஸ்மான் கவாஜா 59, மார்ஸ் 54, பீடா் ஹேன்ட்ஸ்கம்ப் 73 ரன்களையும் சோ்த்து அணியின் ரன் கணக்கை உயா்த்தினா். மேலும் அந்த அணியின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 47 ரன்களும், மேக்ஸ்வெல் 11 ரன்களும் சோ்த்த நிலையில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனா்.

50 ஓவா் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் சோ்த்துள்ளது. இந்திய அணியின் புவனேஷ்வா் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

டெஸ்ட் தொடரை போன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றும் என்று ரசிகா்கள் எதிர்பார்ப்பதால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இப்போட்டியில் பொறுப்பை உணா்ந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.