அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விக்ரமசூரியவை கைது செய்ய இன்று இந்த பிடியாணையை மீண்டும் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. ஜாலிய விக்ரமசூரிய தற்போது அமெரிக்காவில் இருக்கின்றார்.
அவர் அமெரிக்க தூதுவராக இருந்த போது, அமெரிக்காவில் இலங்கைக்கான தூதரக கட்டடத்தை கொள்வனவு செய்வது தொடர்பில் வழங்கப்பட்ட 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 3 இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர் அரசாங்க நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், அமெரிக்காவுக்கு சென்றதுடன் நாடு திரும்பவில்லை. இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.
இதனிடையே நிதி மோசடி விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிலும் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஜாலிய விக்ரமசூரிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.






