தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் சந்தானம் என்பவருக்கு கடம்பூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அவரது பெற்றோர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக திருமணம் செய்து வைத்தனர்.
அந்த நபருக்கு 35 வயது ஆகிறது. அவரின் கொடுமை தாங்க முடியாமல் அந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
பின்னர் அவர் கோவையில் உள்ள மில்லில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். தற்போது அச்சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து ஒட்டப்பிடாரம் சமூக நலத்துறை அலுவலர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தினார்.
மேலும், அவர் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில், இன்ஸ்பெக்டர் சோபனா ஜென்சி வழக்குப் பதிந்து 13 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைத்த சிறுமியின் தந்தை முத்துசாமியை கைது செய்தனர். மேலும் திருமணம் செய்த வாலிபர் சந்தானத்தை தேடி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை வரிசையில், இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
இத்தகையக் குற்றங்களுக்கு காரணமாக குற்றவாளிகளுக்கு மனித உரிமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையான தண்டனைகளை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
இதை எதிர்த்து எங்கு மேல் முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப்பட்டால் அடுத்த ஒரு வாரத்தில் தண்டனையை நிறைவேற்றுவது தான் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






