பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
மக்காத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல.
ஏற்கனவே 7.5.2002 அன்று பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால் 30.1.2003 அன்று வெளிப்படையான காரணம் எதுவும் இன்றி அச்சட்டத்தை திரும்பப்பெற்றார்.
அப்போது அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 15 ஆண்டுகள் கழித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு 2003-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலைமை, இப்போதைய புதிய அறிவிப்புக்கும் ஆகிவிடக்கூடாது. இந்த புதிய பிளாஸ்டிக் தடை அறிவிப்பை அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் தங்களை தயார் படுத்திகொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் மண்பானை பயன்பாடு அதிகரித்துள்ளது குறித்து செய்திபுனலில் தகவல் வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு மாற்று ஏற்பாடுகளை கண்டறிந்து அதனை நோக்கி தமிழக மக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர். மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் தானே தவறு..? தற்போது தவர ஸ்டார்சினால் தயாரிக்கப்படும் கவர்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
இவை தண்ணீரில் கரையக்கூடியவை. எரித்தால் காகிதத்தை போல எரியக்கூடியது. மண்ணில் போட்டாலும் மக்கி உரமாகி விடும். இந்த வகையிலான கவர்களை கோவை மாநகராட்சி பொதுமக்களை பயன்படுத்த சொல்லி அறிவுறுத்தியுள்ள நிலையில், இப்போது தமிழகம் முழுவதிலும் இந்த வகையிலான கவர்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.






