சுவையான தொதல் செய்வது எப்படி?

இலங்கையில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் தொதல் என்ற இனிப்பு வகை ஒரு முக்கியமான உணவாகும்.

இலங்கையின் தென் மாகாணமே இந்த உணவின் பிறப்பிடமாக எனக் கூறப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில்தான் இந்த இனிப்பு உணவு முதலில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை யாழ்ப்பாணத்தில் சீனி கழி என்றும் கூறுகின்றனர்.

இலங்கையில் பண்டிகை காலங்களில் வீடுகளில் இந்த தொதல் தயாரிக்கப்படுகிறது. மேலும் சில வீடுகளில் குடிசை கைத்தொழிலாகவும் தொதல் தயாரிக்கப்படுகிறது.

வெளிநாடுகளும் இந்த இனிப்பு வகை ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலான இலங்கை மக்களின் விருப்பத்திற்குரிய இனிப்பு உணவாகவும் தொதல் காணப்படுகிறது.

தேவையான பொருட்கள்

பச்சரிசி, தேங்காய், சீனி, முந்திரி, ஏலக்காய், பாசி பயறு போன்றவை பயன்படுத்தி தொதல் தயாரிக்கப்படுகிறது.

செய்முறை

பச்சரிசி 1 கோப்பை, 5 தேங்காய், சீனி 1 கிலோ, பனை வெல்லம் 250 கிராம், 4 மேசைக் கரண்டி ஜவ்வரிசி அல்லது அதே அளவு வறுத்த பாசிப்பருப்பு, ஏலக்காய் தேவையான அளவு பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காயைத் துருவி அதன் பாலைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அகன்ற சட்டியில் பச்சரிசி மாவு, தேங்காய்ப் பால் 6 கப், சீனி, பனை வெள்ளம், பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக ஊற்றி இரண்டு மணி நேரம் கிளர வேண்டும்.

பின்னர் 2 கப் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலவை திரண்டு அல்வா போன்ற வடிவம் வரும் வரையிலும் கிண்ட வேண்டும்.

பின்னர் ஏலக்காயைப் பொடியாக்கித் தூவ வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பை மேலே தூவலாம்.

அல்வா வடிவத்தில் கையில் ஒட்டாத பதம் வந்ததும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம்.