சமகால அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலுப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி சென்றவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஒழுங்காற்று நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவின் இணக்கப்பாட்டிற்கு எதிராக செயற்படுவது தொடர்பில் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள முடியும், எனவும் அவ்வாறு கட்சி மாறுவது கட்சி கொள்கையை மீறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய ஒழுக்காற்று குழுவினால் குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒழுக்காற்று குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகமைய அவசியமென்றால் குறித்த உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க முடியும், கட்சி உறுப்புரிமையை தடை செய்ய முடியும் எனவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.






