அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதற்கு காரணம் கோஹ்லியா?

பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியது குறித்து முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருந்தபோது, அவருக்கும் விராட் கோஹ்லிக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால், பி.சி.சி.ஐ-க்கு நெருக்கடி கொடுத்து ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க கோஹ்லி ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதற்கிடையில் அனில் கும்ப்ளே தாம் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கும்ப்ளேவின் இந்த முடிவுக்கு காரணம் கோஹ்லியாக இருக்கலாம் என்ற கருத்து நிலவியது.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘நாங்கள் அனைவரும் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக தொடர வேண்டும் என்றே விரும்பினோம். அவரிடம் நிறைய முறை இதை வலியுறுத்தவும் செய்தோம்.

ஆனால், அனில் கும்ப்ளே தனது ராஜினாமாவில் மிக உறுதியாக இருந்தார். நாங்கள் எவ்வளவோ கூறியும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறுகையில், ‘கும்ப்ளே மற்றும் கோஹ்லி இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து எனக்கு குறைவாகவே தெரியும். ஆனால், இது இந்திய கிரிக்கெட்டின் துக்க நாள். அனில் கும்ப்ளே பயிற்சியாளர் ஆன நாளிலிருந்து இந்தியா கிட்டத்தட்ட அனைத்துப் போட்டிகளையும் வென்றுள்ளது.

கடந்த ஓர் ஆண்டில் கும்ப்ளே தவறு எதுவும் செய்ததாக தெரியவில்லை. கருத்து வேறுபாடுகள் எல்லா அணிகளிலும் ஏற்படும். ஆனால், ஆட்ட முடிவுகளையே இறுதியில் காண வேண்டும். ராஜினாமா செய்ய கும்ப்ளேவுக்கு காரணங்கள் இருந்திருக்கும். ஆனால், அவர் பணியில் நீடிப்பார் என நினைத்தேன்.

ஆலோசனைக் குழு கும்ப்ளேவுக்கு ஆதரவாக உள்ளதால், அவர் பணியில் நீடித்திருக்க வேண்டும். நிச்சயம் அவர் இன்னும் பலமாக மீண்டு வருவார் என எண்ணுகிறேன்.ஆனால், முதல் முறையாக போராட்டக் குணம் கொண்ட கும்ப்ளே அதை எதிர்த்து நிற்கவில்லை.

ஒரு வீரராகவும், நிர்வாகியாகவும் அனில் கும்ப்ளேவிடம் உள்ள திறமைகளும், அனுபவங்களும் இந்திய கிரிக்கெட்டுக்குப் பயன்பட வேண்டும்’ என உருக்கத்துடன் தெரிவித்தார்.