மீண்டும் ஜனாதிபதிப் பதவியைக் குறி வைக்கும் மைத்திரி….!!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்குமே சிக்கலும், பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.எனவே, அதனை நீக்கிவிட்டு மாற்று வழிகளைச் சிந்திக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி. சமர்ப்பித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது நேற்று இரண்டாவது நாளாகவும் விவாதம் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சரவணபவன் எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு மேலும் உரையாற்றிய அவர்;

மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதைப் போல பிரதமர் யார் என்கிற சர்ச்சையில் இருந்து இப்போது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்கிற சர்ச்சைக்கு நகர்ந்திருக்கின்றோம்.நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, தனக்குப் பதவி ஆசை இல்லை என்று பிரதமர் பதவிக்கான அடிதடியின் போது இந்தச் சபையிலேயே கூறியிருந்தார்.

ஆனால், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அவர் மீண்டும் போட்டி போடுவதைப் பார்க்கும்போது பதவி ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது என்று எண்ணத் தோன்றுகின்றது.2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பேன் என்று வாக்குறுதி வழங்கிய இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த வாக்குறுதியிலிருந்து வழுகுவதன் காரணமாகவே அவர் பதவியில் இருக்கும்போதே

நிறைவேற்று அதிகாரத்தை முற்றுமுழுதாக ஒழிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நாம் வலியுறுத்த வேண்டியதாக உள்ளது.நாட்டை நிர்வகிப்பது அமைச்சரவை அல்ல; நாடாளுமன்றம் அல்ல; இந்த நாட்டை ஒரு குடும்பமே ஆட்சி செய்கின்றது. அதனூடாக நாடு உறுதித்தன்மையை இழந்துள்ளது.

இந்த நிலை நீடித்தால் நாட்டில் பாரதூரமான நிலமை ஏற்படும். ஆகையால் நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இந்த நாட்டில் சட்டவாட்சியை நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதிப்படுத்தி அனைத்தையும் பாதுகாத்து அரசியல் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளேன்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நூறு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்போடு இரத்துச் செய்து, அமைச்சரவை ஊடாக நாடாளுமன்றத்துடன் இணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசமைப்பொன்றை உருவாக்குவதே இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கிய இலக்காகும்” என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் ஜனாதிபதி.

1978ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஜனாதிபதி முறைமையால் நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த பின்னர், காட்டுத்தனமான சர்வாதிகாரப் போக்குடைய ஒருவரின் கையில் இந்த அதிகாரங்கள் சென்றதன் விளைவாக இந்த நாடே அவரது குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டதன் விளைவை வெறுத்ததன் பின்னர், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையே வேண்டாம் என்று இந்த நாட்டு மக்கள் கொந்தளித்துக் கிடந்தபோதுதான் மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை 100 நாட்களுக்குள் முற்றாக ஒழிப்பேன் என்று கூறினார்.

அவரது அந்த வாக்குறுதியையும் நம்பித்தான் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். குறிப்பாகத் தமிழ், முஸ்லிம் மக்களும் முற்போக்குச் சிங்கள மக்களும் அவருக்கு வாக்களித்தார்கள்.ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியின் அதிகாரங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டன. எனினும், முற்றாக அழிக்கபடவில்லை.

இரண்டாவது தடவையாக நிறைவேற்று ஜனாதிபதியாகும் எண்ணம் தமக்கில்லை என்று மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே கூறியிருந்ததன் அடிப்படையில் நிறைவேற்று அதிகார முறைமையை முற்றிலுமாக அழிப்பதற்கு அவர் ஒருபோதும் எதிராக இருக்கமாட்டார் என்கிற நம்பிக்கையிலேயே பெரும்பான்மையான மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள்.ஆனால், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதற்கான அதிகாரத்தைத் தவிர மிகுதி அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் ஜனாதிபதிப் பதவியில் இருந்த பின்னர் மீண்டும் அந்தப் பதவியில் அமர்வதற்கும் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கோலோச்சுவதற்கும் அவர் தயாராகிவிட்டார் என்பது கவலைக்குரியது.

அவரது இந்த உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அண்மையை அரசியல் நெருக்கடியையும் குழப்பங்களையும் ஏற்படுத்தினார் என்றும்கூட விமர்சிக்கப்படுகின்றது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.