ரணிலின் முக்கிய அறிவிப்பு.. அந்தரத்தில் பலர்..

நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக இரத்து செய்யவும், அரசியலமைப்பில் காணப்படுகின்ற குறைபாடுகளை திருத்திக் கொள்ளத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவினை மக்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதே நிலையான ஜனநாயகத்தை செயற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுத்த நீதிக்கான போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியாக இதுரை காலமும் செயற்பட்ட நாங்கள் எதிர்கால சவால்களை வெற்றிக் கொள்ள ஜனநாயக தேசிய முன்னணியாக செயற்படவுள்ளோம். இதனை ஒரு அரசியல் கூட்டணியாக பதிவு செய்ய உள்ளோம்.

பாரிய போராட்டத்தின் மத்தியில் தற்போது மீண்டும் அதிகாரத்தை பெற்றுள்ளோம். மக்கள் எதிர்பார்த்த கடந்த காலத்தில் தவறவிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் முழுமைப்படுத்தப்படும். எமக்கு இடைப்பட்ட காலத்தில் முக்கியமாக நடத்தப்பட வேண்டிய இரண்டு பிரதான தேர்தல்கள் காணப்படுகின்றது.

எனவே ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் பாரளுமன்ற தேர்தலிலே பல விடயங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

அரசியல் கட்சியாகின்றது ஐக்கிய தேசிய முன்னணி!

– ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ வெற்றிக்கொண்டாட்டத்தில் ரணில் அறிவிப்பு

ஐக்கிய தேசிய முன்னணி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும் என்றும், வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான அனுமதி பெறப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று மாலை நடைபெற்ற ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய அனைவருக்கும் முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒக்டோபர் 26 ஆம் திகதியுடன் எல்லாம் முடிவடைந்துவிடும் எனச் சிலர் நினைத்தனர். ஆனால், மக்கள் சக்தி என்றால் என்னவென்பதை நாம் காட்டியுள்ளோம். பல சவால்களுக்கு மத்தியில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தோம்.

இனிவரும் காலப்பகுதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்கள் பக்கம் நின்று தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். ஜனநாயகத்துக்காக அணிதிரண்ட கூட்டணி தொடரவேண்டும்.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் தற்போது கூட்டணியாகச் செயற்படும், ஐக்கிய தேசிய முன்னணி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும்” – என்றார்.

இதேவேளை, மகிந்த மற்றும் ரணிலின் எதிர்காலம் நிலைப்பது என்பது சாத்திய மற்ற ஒன்று. இந்த அறிவிப்பில் பலர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.