இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை 235 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று, முதலில் பேட் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக புஜாரா 123 ரன்களும், ரோகித் சர்மா 37 ரன்களும், அஸ்வின், பண்ட் தலா 25 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் தொடக்கத்தில் 235 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி 15 ரன்கள் பினதங்கியது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 72 ரனகள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த், ஷமி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
15 ரன்கள் முன்னிலையுடன் 2 வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல், விஜய் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த நிலையில், விஜய் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராகுல் 44 ரன்களுக்கும், கோலி 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 40 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், ஹாசில்வுட், லயன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தற்போதைய சூழலில் இந்திய அணி 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.






