பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு நல்லது செய்யவே விரும்புகிறார், அதற்காக அவர் கடினமாக உழைகவும் செய்கிறார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த வருடம் முதல் தனது அரசியல் பயணத்தை உறுதிப்படுத்திய ரஜினிகாந்த் அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாகவும் ரஜினி உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால், தனது அரசியல் பயணத்திடன் இணைந்து திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு நடிகர் ரஜினி காந்த பேட்டி அளித்துள்ளார். அதில், பிரதமர் மோடி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ” அவர் நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காக கடின உழைப்பையும் கொடுக்கிறார் என்றார்.
அடுத்ததாக தமிழகத்தில் அரசியல் சூழல் குறித்த கேள்விக்கு, “ தமிழகத்தில் தற்போது வெற்றிடம் உள்ளது. தமிழர்களிடம் நிறைய ஆற்றல் வளம் உள்ளது. அவர்கள் கடின உழைப்பாளி மட்டுமல்ல அறிவார்ந்த மக்கள். ஆனால், அவர்கள் தங்களது திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்து விட்டார்கள். இதனால் தமிழக மக்களுக்குக் கல்வி கற்பிப்பது மிக அவசியமானது.
மக்களுக்கு அரசியல் அறிவை அளிக்க வேண்டும். மக்களிடம் ஓட்டு கேட்பதை விட, அறிவை அளிப்பதே முக்கியம். மக்கள் கடினமாக உழைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டும்.
அரசியல் தளம் வேறு. சினிமா வேறு. பொழுதுபோக்கிற்கான விஷயங்களில் அரசியலை கொண்டுவரக் கூடாது. இரண்டையும் தூரத்தில் வைத்தே நான் பார்த்து வருகிறேன். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் எந்தவொரு நபருக்கும் எம்.ஜி.ஆா். ஒரு ரோல் மாடல். அவா் இயல்பாகவே பிறருக்கு உதவும் குணத்தை கொண்டவா். அதனால் எனக்கும் அவர் ரோல் மாடல். அதுபோலவே ஜெயலலிதாவின் தன்னம்பிக்கை மற்றும் உறுதித் தன்மையை பாராட்டியே ஆகவேண்டும். ஆண்கள் நிறைந்த அரசியல் உலகத்தில் தனியொரு பெண்ணாக நின்று சாதித்தவா்.
தற்போது வரை முழுமையான நான் அரசியலில் ஈடுபடவில்லை. அரசியல் என்பது ஆபத்தான மற்றும் நாடகம் நிறைந்த விளையாட்டு. அதில் நாம் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும். நேரம் மிக முக்கியமானது ” என்று அவா் பேசியுள்ளாா்.






