விமானத்தில் கதறி அழுத “பயங்கரவாதி”

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கோல்கட்டாவில் வசிப்ப்பவர் யோகவேதாந்த் போத்தார். 21 வயது இளைஞரான இவர், கோல்கட்டாவிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு நேற்று ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் முன் பதிவு செய்து இருந்தார்.

காலை, 8:15 க்கு விமானம் புறப்பட வேண்டிய விமானம் அது. 7:30க்கு, விமானத்திற்குள் ஏறிய யோகவேதாந்த், இருக்கையில் அமர்ந்தவுடன், தன் முகத்தை, கைக்குட்டையால் மூடிக்கொண்டார். பிறகு தன் முகத்தை ஒரு, ‘செல்பி’ எடுத்தார். அந்தப் படத்தை தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். கூடவே, ‘விமானத்தில் பயங்கரவாதி; பெண்களை கொல்லப்போகிறேன்’ என்று பதிவிட்டார்.

போத்தாரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி, இதை கவனித்துக்கொண்டிருந்தார். அவருக்கு பயமாகப்போய்விட்டது. உடனே, விமான பணிப் பெண்ணிடம், ரகசியமாக தகவல் தெரிவித்தார்.

அதிர்ந்துபோன விமானப்பணிப்பெண், கோல்கொட்டா விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதைஅடுத்து, சி.ஐ.எஸ்.எப்., எனப்டும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடியாக விமானத்துக்குள் நுழைந்தனர். பாய்ந்து சென்று யோகவேதாந்த்தை அமுக்கிப்பிடித்தனர். அப்படியே அவரது கைகால்களைக் கட்டி விமானத்துக்கு வெளியே தூக்கி வந்து, தங்களது பாதுகாப்பு அறைக்குக் கொண்டு சென்றனர்.

பிறகு அதிரடியாக விசாரணை ஆரம்பமானது. நடந்த சம்பவங்களால் அதிர்ந்துபோன இளைஞர் யோகவேதாந்த், “நான் பயங்கரவாதி அல்ல. சும்மா விளையாட்டுக்காக அப்படி நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினேன்” என்று அழ ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் பாதுகாப்பு படை அதிகாரிகள் நம்பவில்லை. தொடர்ந்து தங்கள் அதிரடியான விசாரணையை நடத்தினர்.

அவ்வளவுதான் “ஓ..”வென்று கதறி அழ ஆரம்பித்துவிட்டார், “பயங்கரவாதியான” அந்த இளைஞர் யோகவேதாந்த்.

இதையடுத்து, “சரி.. இது டம்மி பீஸ்தான் போல” என்ற முடிவுக்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள், யோகவேதாந்த்தின் பெற்றோரை அலைபேசியில் தொடர்புகொண்டு அவரைப் பற்றி விசாரித்தார்கள்.

அப்பாவி இளைஞர்தான் என்றும் ஆர்வக்கோளாறினால் இப்படி நடந்துகொண்டிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. பிறகு மீண்டும் ஒரு முறை, யோகவேதாந்த்தின் அடையாள ஆவணங்களை ஆராய்ந்தனர்.

பிறகு திருப்தியான அதிகாரிகள் யோகவேதாந்த்தை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

என்னவோ ஏதோ என்று பதட்டமாகியிருந்த விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தை நிலையத்திலேயே நிறுத்தியிருந்தனர். ஏதும் பிரச்சினை இல்லை என்பது தெரியவந்த பிறகு விமானம் புறப்பட அனுமதி அளித்தனர்.

“பயங்கரவாதி” யோகவேதாந்த்தும் அதே விமானத்தில் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக கிளம்பிச்சென்றார்.