டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி இந்திய அணி வெற்றி!!

மகளிர் அணிகளுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி லீக் தொடரில் ஏற்கனவே 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று, பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்காக நேற்று ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

இந்த போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இப்போட்டியில் இந்திய அணியில் மிதாலி ராஜ், மான்சி ஜோஷி நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அனுஜா பட்டீல், அருந்ததி ரெட்டி சேர்க்கப்பட்டனர். முதலில் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா இணை அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த இணை 12 ஓவர்களில்100 ரன்களை எட்டி பிடித்தது. அதிரடியாக விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர் 27 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் கிம்மின்சி பந்து வீச்சில் ராச்சல் ஹானேஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதனையடுத்து வந்த வீரர்கள் வந்தவுடனேயே நடையை கட்டினர். அபாரமாக நிலைத்து நின்று ஆடிய மந்தனா 83 ரன்கள் அடித்திருந்தபோது மெகன் ஸ்குட் பந்து வீச்சில் ஆட்டம் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து தடுமாறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 19.4 ஓவர்களிலிலே 119 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி கேட்ச் பிடிக்க முற்படும்போது சக வீராங்கனையுடன் மோதி காயம் அடைந்ததால் பேட்டிங் செய்யவில்லை. ஆஸ்திரேலிய அணியின் எலிசி பெர்ரி மட்டும் அதிகாட்சமாக ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, பி பிரிவில் முதலிடத்தை பிடித்தது.

இந்திய அணி தரப்பில் அனுஜா பட்டீல் 3 விக்கெட்டும், மற்றும் தீப்தி ஷர்மா, ராதா யாதவ், பூனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இந்திய வீராங்கனை 83 ரன்கள் எடுத்த மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார்.