எனக்கு பேசத்தெரியாது, அதனால்தான் இப்படி செய்தேன்: இளம்பெண்ணின் வித்தியாசமான முயற்சி

கனடாவில் காணாமல் போகும் மற்றும் கொலை செய்யப்படும் பூர்வக்குடியின இளம்பெண்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார் ஒரு கனடிய இளம்பெண்.

Charla Sylvester (25)இன் புகைப்படக் கலை மீதான காதல், அவர் தனது கைக்குழந்தையை புகைப்படம் எடுக்கும்போது வெளிப்பட்டது. அவர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று, பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ஒரு இளம்பெண் வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில், உடல் கனடா நாட்டுக் கொடியால் சுற்றப்பட்டு, கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறார்.

Sagkeeng First Nation என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் உடல் Winnipegஇலுள்ள நதி ஒன்றிலிருந்து மீட்டெடுக்கப்பட்டபோது மெல்லிய மெத்தை ஒன்றினால் அவரது உடல் சுற்றிக் கட்டப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்து அதையே மாதிரியாகக் கொண்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

பல இளம்பெண்கள் நதிப்படுகைகளிலிருந்து துணியில் சுற்றப்பட்ட நிலையில் எடுக்கப்பட்டதையடுத்து அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கனடா கொடியையே இறந்த உடல்களை வைக்க பயன்படும் பை போல பயன்படுத்தி இந்த புகைப்படத்தை அவர் எடுத்துள்ளார்.

கனடா முழுவதிலும் இதுபோல் காணாமல் போகும் மற்றும் கொல்லப்படும் பூர்வக்குடியின இளம்பெண்கள் குறித்து கவனம் ஈர்க்க விரும்புவதாக தெரிவிக்கும் Charla, தனக்கு பேசத் தெரியாது எனவும், அதனாலேயே தனக்கு தெரிந்த புகைப்படக் கலையையே பயன்படுத்தி தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவும், தனது சேவை தொடரும் என்றும் தெரிவிக்கிறார்.