நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் வெட்டிப் படுகொலை செய்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை, இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல் நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து, தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அரைகுறையாக எரிந்த இறந்த இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், எரித்துக்கொல்லப்பட்ட இளைஞர் மதுரை பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் என்பதும், அவர் மதுரை அருகே வரிச்சூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பியபோது, மதுரை சிவகங்கை சாலையில் காரில் வந்த மர்ம கும்பல், நடுரோட்டில் அரவிந்தை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி வீழ்த்தியும், அவரது உடலை அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கூறி உள்ளனர். இதுகுறித்து கருப்பாயூரணி காவல் துறையினர் தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை சிவகங்கை மாவட்ட நெடுஞ்சாலையில் நடந்த இந்த கொடூரக் கொலை மற்றும் தீ வைப்பு சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






