சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் கேரளா மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், இதனால் சபரிமலையில் போராட்டக்காரர்களை அடக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவிட்டதால் சில பெண்கள் கோவிலுக்கு வர தொடங்கினார்கள்.
ஆனாலும் சபரிமலைக்கு சென்ற பல பெண்களை போராட்டம் செய்பவர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அதன்பின் போலீசார் அவர்களிடம் பேசி அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் ஐப்பசி மாதம் பூஜை நிறைவடைந்து பூட்டப்பட்ட கோவில் இன்று மறுபடியும் தற்போது மீண்டும் பூஜைக்காக பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.
தற்போது கேரளா பாஜக தலைவர் ஸ்ரீதரன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள செய்தி சேனல்களிலும் வெளியிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதரன் பேசிய ஆடியோவில் ” சபரிமலை பிரச்சனைதான் கேரளா பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு. சபரிமலை விவகாரத்தில் அனைவரும் நம்மிடம் சரணடைந்துள்ளனர்.இப்பிரச்சனையை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கேரளா அரசால் இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்க முடியாது. சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பால் ஐயப்பன் கோயிலின் தலைமை தந்திரி கண்டராரு ராஜீவாரு குழப்பத்தில் இருந்தார்.பெண்கள் வரத்தொடங்கினால் நடையை மூடிவிடலாம் என்று அவர் என்னிடம் ஆலோசித்தார். எதற்கும் அச்சப்படாதீர்கள், கேரளா பாஜக உறுதுணையாக இருக்கும் என நான் உறுதி அளித்தேன். ஐபிஎஸ் ஸ்ரீஜித் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அழைத்து செல்ல முயன்ற போது, மக்களை அழைத்து வந்து அதை தடுத்து நிறுத்தியது நாம்தான். இந்த விஷயம் உலகத்திற்கு தெரியாது” என்று பதிவாகியுள்ளது.
இதனையடுத்து ஆடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீதரன் சபரிமலைக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பலர் எங்களிடம் உதவி கேட்டு வருவதாகவும், தீர்ப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் எப்படி ஈடுபடலாம் என்றே தலைமை தந்திரியிடம் தான் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கேரளாவில் மதரீதியாக பிளவுகளை ஏற்படுத்த பாஜக நினைப்பதாக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
பாஜக தலைவர் ஆடியோ குறித்து கேரளா முதலமைச்சர் பிரனாயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ” பாஜகவின் அருவறுப்பான அரசியல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதரீதியாக பிளவுகளை ஏற்படுத்த பாஜகவின் மாநில தலைவர்களே முயற்சி செய்தவர்கள் ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.






