17 வயது பெண்ணுக்கு 45 வயது ஆண் மீது ஏற்பட்ட காதல்! அதிர்ச்சியில் பெற்றோர்

தமிழகத்தில் திருமணமான ஆண்களின் மீது பதின்பருவ பெண்களுக்கு காதல் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தம்பதியர் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில் தங்களது 17 வயது மகள், 45 வயதான திருமணமான நபர் ஒருவரை காதலித்து அவருடன் சென்றுவிட்டதாகவும், தங்களது மகளை மீட்டு தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், இவ்வாறு 17 வயது பெண்ணுக்கு 45 வயது ஆண் மீது காதல் வந்தது அதிர்ச்சியளிக்கிறது.

இப்படி திருமணம் ஆன ஆண்களை நிறைய பதின்பருவ பெண்கள் விரும்புகிறார்கள். இன்று கூட திருமணமான ஆண்களுடன் சிறுமிகள் ஓடிவிட்டதாக ஒரே நாளில் 8 மனுக்கள் வந்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், இதையெல்லாம் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. சிறுமிகள் வீட்டை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள் என்ற காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த விடயத்தை டி.ஜி.பி மற்றும் சமூக நலத்துறை செயலாளர் போன்றோர் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பதின்பருவ சிறுமிகள், திருமணம் ஆன ஆண்களுடன் ஓடிப் போய் இருக்கிறார்கள் என்ற பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமிகளை இவ்வாறு காதல் வலையில் வீழ்த்தி தங்களுடன் அழைத்துச் செல்லும் ஆண்கள் மீது பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.