கோவை மாவட்டத்தில் ஜி.எஸ்.டி. இயக்குனரகம் சார்பாக ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.29 முதல் நவ.3 வரை அனுசரிக்கப்பட்டது. அதில் “ஊழலை ஒழிப்போம்.. நாட்டை உயர்த்துவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் “லஞ்சம் தவிர்த்து… நெஞ்சம் நிமிர்த்து” என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர், இளைஞர்களால் அதிகம் கவரப்பட்டவர், மிகவும் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழும் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், அரசு நிர்வாக பொறுப்பில் இருந்து கொண்டு நேர்மையாக இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல, நேர்மையாக இருப்பவர்கள் நிராகரிப்பு, புறக்கணிப்பு, இடமாற்றம் உள்ளிட்ட பல விளைவுகளுக்கு தயாராகவே இருக்க வேண்டும்.
அரசுத்துறையில் நேர்மையானவர்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அரசுத்துறையில் நேர்மையானவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நம் நாட்டில் ஊழல் என்பது ஆலமரம்போல் பரவி விட்டது. அதை அழிக்க வேண்டிய கடமை இளைஞர்களிடம் உள்ளது, ஊழலை எதிர்த்து நின்ற போதெல்லாம் நான் அவமானப்படுத்தப்பட்டேன். தூக்கியடிக்கப்பட்டேன். ஆனால் என்றும் நான் என் கடமையிலிருந்து விலகவில்லை.
உலக நாடுகளில் ஊழல் அதிகம் அரங்கேறும் நாடுகளுக்கான ஆய்வு பட்டியலில் இந்தியா முன்னேறி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்தும் ஆயுதம் இளைஞர்கள் தான்.
இந்த நிலையில் இருந்து தாயகத்தை மீட்க, பள்ளி பாடபுத்தகத்தில் ஊழல் ஒழிப்பு குறித்து பாடங்களை சேர்க்க வேண்டியது அவசியம். நேர்மை என்ற கலாச்சாரத்தை ஆரம்பத்திலேயே விதைத்துக் கொள்ளவேண்டும் என பேசினார்.






