சூளைமேட்டில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு நேற்று இரவு 12 மணி அளவில் இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக வந்தார். அவரோடு 3 பெண்களும், ஒரு ஆணும் வந்திருந்தனர்.
கர்ப்பிணியாக இருந்த பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்த பின்னர் டாக்டர் ஒருவர் பரிசோதனை செய்துள்ளார். அந்த பெண்ணை வைத்தியசாலை அனுமதிப்பதற்கான நடைமுறைகள் செய்யப்பட்டன.இந்த நிலையில், அந்த பெண் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அப்பெண் அங்கேயே குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் ஒரு வாளியை எடுத்து குழந்தையின் மேல் மூடி வைத்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.
அவருடன் வந்திருந்தவர்களும் காலையில் மீண்டும் வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.இன்று அதிகாலை 5 மணியளவில் குழந்தை கதறி அழுதது. இந்த சத்தம் வைத்தியசாலை முழுவதும் எதிரொலித்தது. இதனை தொடர்ந்து வைத்தியசாலை இருந்த ஜெமிமா என்ற பெண் கழிவறைக்கு சென்று பார்த்தார்.
அப்போது அங்கு வாளியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஆண் குழந்தை பசியால் அழுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் சூளைமேடு சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
குழந்தையை மீட்ட வைத்தியசாலை ஊழியர்கள், அதற்கு சிகிச்சை அளித்து பாதுகாத்தனர். பொலிஸ் விசாரணையில் குழந்தையை பெற்றெடுத்தது பெண் வக்கீல் என்பது தெரியவந்தது.திருமணம் செய்து கொள்ளாத நிலையில், அவர் குழந்தை பெற்றிருப்பது தெரியவந்தது. பொலிஸ் விசாரணையின் போது குழந்தையை தானே வளர்த்துக் கொள்வதாக பெண் வக்கீல் கூறியுள்ளார்.
இதுபற்றி சூளைமேடு பொலிஸார் கூறும்போது, இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளனர் .







