தமிழை வீழ்த்தியவர்கள் யார்? எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு, நமது மொழியில்!!

1. தமிழ் மொழியின் சிறப்பு

உலகிலுள்ள அனைவருக்கும் தாய்மொழி என்று ஒன்று உண்டு. ஆனால், மொழியையே தாயாக போற்றி வணங்குபவர்கள் தமிழர்கள் தான். இந்தப் பேறு உலகில் வேறு ஏதேனும் மொழியினருக்கும் கிடைத்திருக்குமா? என்பது ஐயம் தான். அதனால் தான் தமிழை அன்னை தமிழ் என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தை எவரும் ‘மதர் இங்கிலீஷ்’ என்று அழைப்பதில்லை. சீன மொழியான மாண்டரினை எவரும் ‘மாமா மாண்டரின்’ (மாண்டரின் மொழியில் மாமா என்றால் தாய் என்று பொருள்) என்று அழைப்பதில்லை. அந்தப் பெருமை அன்றும் இன்றும் என்றும் தமிழுக்கு மட்டும் தான் உண்டு.

பாவேந்தர் பாரதிதாசனோ தமிழ் தாயை விட ஒரு படி மேல் என்கிறார். அதனால் தான்….
‘‘தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடேன்.
தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்’’
– என்று முழக்கம் இடுகிறார்.

தமிழின் இனிமை

அதேநேரத்தில் தமிழின் இனிமையைப் பற்றி குறிப்பிடும் போது பாரதியாரும் சரி… அவரின் தாசனான பாரதிதாசனும் சரி… தங்களின் வீரத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு குழைகிறார்கள்.
‘‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்’’
-பாரதியார்.

தமிழுக்கும் அமுதென்று பேர்! — அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
– பாரதிதாசன்.

தமிழின் இனிமையையும், சுவையையும் இந்த இரு வரிகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட சிறப்பாக வேறு எவராலும் போற்றிப் பாடிவிட முடியாது.

தமிழின் இளமை

இனிமையும், சுவையும் தமிழுக்கு உண்டு. அவற்றைக் கடந்து, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழியான தமிழுக்கு இளமையும் உண்டு என்று போற்றுகிறார் மனோன்மணியம் பெ.சுந்தரனார்.

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!’’ என்று சுந்தரனார் கூறுகிறார்.

அதாவது கன்னடம், இனிமையான தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழில் இருந்து தோன்றியவை தான் என்றாலும் ஆரிய மொழியான சமஸ்கிருதத்தைப் போன்று உலக வழக்கொழிந்து விடாமல், வியக்க வைக்கும் அளவுக்கு சீரிளமையுடன் தமிழ் மொழி திகழ்வதாக மனோன்மணியம் சுந்தரனார் கூறுகிறார். அவரதுக் கூற்று மிகவும் சரியானது. உலகின் மூத்த மொழிகளில் இன்னும் இளமையுடனும், வளமையுடன் திகழ்வது தமிழ் மொழி தான்.

உலக அளவில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை சுமார் 8000 என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவற்றில் பல மொழிகளைப் பேசுபவர்கள் பத்துக்கும் குறைவானவர்கள். இந்த அத்தியாயத்தை படித்து முடிப்பதற்குள் பல மொழிகள் அழிந்திருக்கக் கூடும். அந்த அளவுக்கு பல மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஆனால், ஒரு நாட்டில் முழுமையாகக் கூட இல்லாமல் ஒரு மாநிலத்தில் மட்டும் பேசப்படும் மொழியாக உள்ள தமிழ் எண்ணற்ற பெருமைகளைக் கொண்டுள்ளது.

அழியாத இளமை மொழி

உலகில் மிகவும் பழமையான மொழிகள் என்ற பெருமையைப் பெற்றவை ஆறு மொழிகள் தான். அவை 1.எபிரேய மொழி, 2. கிரேக்க மொழி, 3. இலத்தின் மொழி, 4.சமஸ்கிருதம், 5. தமிழ் மொழி, 6. சீன மொழி ஆகியவை தான். அவற்றில் முதல் நான்கு மொழிகள் அழிந்து விட்டன. மீதமுள்ள மொழிகளில் சீனாவின் மாண்டரின் மொழி தான் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்றாலும் கூட, இளமையான மொழி என்றால் அது தமிழ் மட்டும் தான்.

‘‘உலக மொழிகளிலேயே தமிழுக்கு மட்டும் தான் தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, நுண்மை, திருமை, இயன்மை, வியன்மை என 16 வகை சிறப்புகள் உள்ளன’’ என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்.

இவை தவிர தமிழுக்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. பொதுவாக எண்கள் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், ஆங்கிலத்தில் கூட அதிகபட்சம் மதிப்பாக ஸில்லியன் தான் உள்ளது. மில்லியன் என்றால் 10 லட்சம், பில்லியன் என்றால் 100 கோடி, டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி, ஸில்லியன் என்றால் 10 கோடி கோடி ஆகும். அதற்கு மேல் உள்ள மதிப்பை ஸில்லியனின் மடங்காகத் தான் அடுக்கிச் சொல்ல வேண்டும்.

எண் சிறப்பு மொழி

ஆனால், தமிழில் அதையும் தாண்டிய மதிப்புகளுக்கு தமிழ் சொற்கள் உண்டு. தமிழில் 10 கோடி கோடி கோடி என்ற மதிப்பு வரை நேரடி தமிழ் சொற்கள் உண்டு. கோடி என்ற தமிழ் வார்த்தையை நம்மில் பலரும் அறிந்திருக்கக் கூடும். அதற்கு மேல் உள்ள மதிப்பை 10 கோடி, 100 கோடி என்று சொல்லத் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். அவற்றுக்கும் நேரடி தமிழ் சொற்கள் உண்டு. அவற்றின் விவரம் வருமாறு:
10 கோடி – அற்புதம்
100 கோடி – நிகற்புதம்
1000 கோடி – கும்பம்
10,000 கோடி – கணம்
லட்சம் கோடி – கற்பம்
10 லட்சம் கோடி – நிகற்பம்
கோடி கோடி – பதுமம்
10 கோடி கோடி – சங்கம்
100 கோடி கோடி – வெள்ளம்
1000 கோடி கோடி – அந்நியம்
10,000 கோடி கோடி – அற்ட்டம்
லட்சம் கோடி கோடி – பறற்ட்டம்
10 லட்சம் கோடி கோடி – பூறியம்
கோடி கோடி கோடி – முக்கோடி
10 கோடி கோடி கோடி – மகாயுகம்

உலகில் வேறு எந்த மொழியிலும் இவ்வளவு மதிப்பைக் குறிப்பிடும் அளவுக்கு நேரடி வார்த்தைகள் இல்லை. தமிழில் இந்த அளவுக்கு சொற்கள் இருப்பதைப் பார்க்கும் போது அதை தமிழின் செழிப்பாகவும், வளமையுமாகவும் மட்டும் கருத முடியாது. அந்தக் காலத்திலேயே 10 கோடி கோடி கோடி என்ற மதிப்பை ( ஒன்றுக்கு பின்னால் 22 சுழியங்கள்) கணக்கிடும் அளவுக்கு தமிழர்கள் வசதியாக இருந்துள்ளனர். இல்லாவிட்டால் இவ்வளவு அதிக மதிப்புக்கான தமிழ் சொல்லை தமிழர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது.

பெயர் மொழி

அதேபோல் மொழியின் பெயரே மனிதனின் பெயராகவும் அமையும் பெருமை தமிழுக்கு உண்டு. தமிழ், பைந்தமிழ், செந்தமிழ், தமிழ் அரசன், தமிழ் செல்வம், தமிழரசி, தமிழ்நங்கை என்பன உள்ளிட்ட பெயர்கள் தமிழில் மட்டுமே உண்டு. Fine English, English King, English Queen என்பன போன்ற பெயர்களை ஆங்கிலத்திலோ, அதற்கு இணையான பெயர்களை பிற மொழிகளிலோ நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒரு வேளை Fine English, English King, English Queen என்றெல்லாம் பெயர் வைத்தால் அது நகைச்சுவையாகத் தான் இருக்கும். தமிழ், பைந்தமிழ், செந்தமிழ் என்பன போன்ற பெயர்கள் தான் பெருமையாகவும், பெருமிதமாகவும் இருக்கும். அதுதான் அன்னை தமிழின் சிறப்பு.

மருத்துவ மொழி

தமிழ் இனிமையானது, தமிழ் சுவையானது, தமிழ் இளமையானது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். தமிழைப் பற்றி பெரும்பான்மையினர் அறியாத ஒன்றை மருத்துவர் என்ற முறையில் நான் உங்களுக்குக்கு கூறுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். தமிழ் மருத்துவ மொழி, தமிழை பேசுபவர்கள் அதிக காலம் வாழ்வார்கள். இதைக் கேட்டு வியப்படைய வேண்டாம். இது உண்மை. எப்படி தெரியுமா?

தமிழ்மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும் போது சுவாசப் பையிலிருந்து குறைந்த அளவில் தான் காற்று வெளியேறுகிறது. உலகிலுள்ள பல மொழிகள், பேசும் போது அதிகமான காற்று வெளியேற்ற கூடிய வகையில் அமைந்துள்ளன. பேசும் போது அதிகமான காற்று வெளியேறி செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், நம் வாழ்நாளில் அதிக சுவாசக்காற்றை வெளியேற்றாமல் இருந்தால் நீண்டநாள் வாழலாம் என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதனால் தான் சொல்கிறேன்…. தமிழ் மொழியைப் பேசினால் சுவாசக்காற்றை மிச்சப்படுத்தி நீண்டநாள் வாழலாம் என்பது எழுதப்படாத உண்மை!

தமிழ் மொழியின் சிறப்புகள் இவ்வாறு இருக்க தமிழ் இலக்கியங்கள் இன்னும் சிறப்பானவை. அகத்தியம், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட இலக்கியங்களை மயக்கம் தரக்கூடியவை மட்டுமல்ல… வாழ்க்கைப் பாடங்களையும் கற்பிக்கக் கூடியவை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்