ராஜபக்சே பதவி தப்புமா? – தமிழ்தேசிய கூட்டணி எதிர்ப்பால் சிக்கல்

தமிழ்தேசிய கூட்டணி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ராஜபக்சேவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு

தமிழகம் அருகே நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் இந்தியா போல் அல்லாமல் அதிபர் ஆட்சி முறை கடை பிடிக்கப்படுகிறது.

பொதுத்தேர்தலில் அதிபர் (ஜனாதிபதி) நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெஜாரிட்டி எம்.பி.க்கள் அடிப்படையில் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை எதிர்த்து இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சிறிசேனா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சிறிசேனாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.

அதன்பிறகு அதே ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கே கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் சிறிசேனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் ஆனார். அவர் கூட்டணி மந்திரிசபை அமைத்தார்.

சமீபகாலமாக அதிபர் சிறிசேனா-பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் ரணில் விக்கிரமசிங்கே மீது பல்வேறு முறைகேடுகள் கூறப்பட்டன.

இதனால் ரணில் விக்கிரமசிங்கே மீது இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ரணில் விக்கிரமசிங்கேயை எதிர்த்து சிறிசேனா கட்சி எம்.பி.க்களும், ராஜபக்சே கட்சி எம்.பி.க்களும் வாக்களித்தனர் என்றாலும் ரணில் விக்கிரமசிங்கே மெஜாரிட்டி எம்.பி.க்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றார்.

இந்த வெற்றி காரணமாக சிறிசேனா- ரணில் இடையேயான மோதல் மேலும் வெடித்தது. ரணில் தன்னிச்சையாக நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தார். அதற்கு சிறிசேனா முட்டுக்கட்டை போட்டார்.

இந்தநிலையில் அதிபர் சிறிசேனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேயை அதிரடியாக நீக்கினார்.

அவருக்கு பதில் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது இலங்கை அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிசேனா தன்னை நீக்கியது செல்லாது என்றும் நான் இன்னும் பிரதமர் பதவியில் நீடிக்கிறேன் என்றும் ரனில் விக்கிரம சிங்கே தெரிவித்தார்.

இது தொடர்பாக சிறிசேனாவுக்கு கடிதமும் எழுதினார். மேலும் பாராளுமன்றத்துக்குள் ரணில் நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கேக்கு மெஜாரிட்டி ஆதரவு இருப்பதால் அவர் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற்று விடக் கூடாது என்பதற்காக அதிபர் சிறிசேனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை முடக்கி உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 16-ந்தேதி வரை பாராளுமன்றம் முடக்கப்பட்டு இருப்பதால் அதன்பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும்.

குதிரைபேரம் மூலம் எம்.பி.க் களை இழுப்பதற்கு வசதியாக சிறிசேனா 20 நாட்களுக்கு பாராளுமன்றத்தை முடக்கி வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதனால் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி கூடுவதாக இருந்த பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பலத்துடன் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேயை அதிபர் சிறிசேனா நீக்கியது அரசியல் சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பாராளுமன்றத்தை எப்போது கூட்டினாலும் ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் ராஜபக்சே வெற்றிபெறுவது கடினம் என்றும் தெரியவருகிறது.

இலங்கை பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 225. இதில் மெஜாரிட்டிக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

ரணில் விக்கிரமசிங்கே கட்சிக்கு 106 எம்.பி.க்கள் உள்ளனர். சிறிசேனா-ராஜபக்சே கூட்டணியில் 95 எம்.பி.க்களே உள்ளனர். ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெற இன்னும் 7 எம்.பி.க்கள் ஆதரவே தேவைப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். ராஜபக்சேவை கடுமையாக எதிர்க்கும் அவர்கள் இந்தியாவுடன் நல்ல நட்புடன் இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதவிர மனோகணேசன், பழனி திகம்பரம், ரி‌ஷத் பதியுதீன் ஆகிய தமிழர் மற்றும் முஸ்லிம் கட்சி எம்.பி.க்களும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் ரணில் வெற்றிபெறும் நிலை உள்ளது. அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா? அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படுமா? என்ற பரபரப்பு நிலவுகிறது.

ராஜபக்சேவை பிரதமராக அங்கீகரிப்பதா? அல்லது ரணில் விக்கிரமசிங்கே தொடர்வதை அனுமதிப்பதா? என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகர் ஜெய சூர்யாவிடம் உள்ளது. அவர் சிறிசேனா ஆதரவாளராக இருந்தார்.

ஆனால் நேற்று அவர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கூட்ட முடிவுசெய்து இருந்தார். இதை அறிந்த சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்டார்.

இதனால் சபாநாயகர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் வி‌ஷயத்தில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை இலங்கை அரசியல் தலைவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்