காற்றில் இருந்து மிகக் குறைந்த செலவில் சுத்தமான தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த தம்பதிக்கு ரூ.2 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த தம்பதி டேவிட் ஹேர்ட்ஸ், அவரது லாரா டாஸ் ஹெர்ட்ஸ்.
இவர்கள் இருவரும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் இணைந்து நடத்தும் ‘தி எக்ஸ் பிரைஸ்’ எனும் போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியானது, சமூகத்திற்கு பயன்படும் வகையிலான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவோருக்கு பரிசுகள் வழங்கப்படுவதாகும்.
இந்நிலையில், டேவிட் ஹேர்ட்ஸ்-லாரா டாஸ் ஹேர்ட்ஸ் தாங்கள் கண்டுபிடித்த, காற்றில் இருந்து மிகக் குறைந்த செலவில் சுத்தமான தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை விளக்கினர்.
இதன்மூலம் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் லிட்டர் சுத்தமான நீரை எடுக்க முடியும் என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, இவர்களின் கண்டுபிடிப்பின் மூலம் குறைந்த செலவில், எளிதாக கிடைக்கும் பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்களைக் கொண்டு தண்ணீர் எடுக்கலாம் என்பதால் இந்த ஜோடிக்கு முதல் பரிசு கிடைத்தது.
இந்நிலையில், தங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது குறித்து டேவிட் ஹேர்ட்ஸ் கூறுகையில், ‘நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த தொழில்நுட்பத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் லிட்டர் சுத்தமான தண்ணீர் எடுக்க முடியும்.
இது செலவில்லாத, சிக்கனமான முறையாகும். நாம் தண்ணீரை உருவாக்க மரத்தூள், மரக்குப்பை கிடைக்காவிட்டால் பரவாயில்லை. அதற்கு பதிலாக தேங்காய் மட்டை, தவிடு, நிலக்கடலை தோல், காய்ந்த புற்கள் மற்றும் இயற்கை கழிவுகள் ஆகியவற்றை எரியூட்டப் பயன்படுத்தலாம்.
இந்த தொழில்நுட்பத்தை இயற்கை பேரிடர் காலங்கள், பூகம்பம், நிலச்சரிவு, வறட்சி போன்ற காலங்களில் பயன்படுத்தி மக்களுக்கு எளிதாக சுத்தமான தண்ணீர் கொடுக்க முடியும். ஆனால், எங்கள் தொழில்நுட்பத்தை இன்னும் சிறிது மேம்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.