ஆயுதபூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை முடிவடைந்து இன்று காலை மக்கள் தங்களது சொந்த ஊர்களிலிருந்து தங்கள் பணியிடங்களான சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு, திரும்பி வருவதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள எல்லா பகுதிகளில் இருந்தும் சென்னையில் தங்கி மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடர் விடுமுறை என்றால் ஒரே சமயத்தில் தங்களது சொந்த ஊறுகளுக்கு செல்வது வழக்கம். வழக்கமாக சென்று வருபவர்களும், சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் சேர்ந்து கொள்வதால் சென்னை மட்டும் அதன் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நேற்று மாலை முதலே:
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனையடுத்து, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பணிபுரியும் மக்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு, விடுமுறையை முடித்துக்கொண்டு பணி நாளான இன்று அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நோக்கத்தில் மக்கள் சென்னை, பெங்களூர், கோவை போன்ற பெருநகரங்களுக்கு நேற்று மாலை முதலே திரும்பத் தொடங்கினர்.
நீண்ட வரிசையில்:
இதன் காரணமாக, கிருஷ்ணகிரி-பெங்களூர் நெடுஞ்சாலையின் இடையே உள்ள சுங்க சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. அதேபோல், தமிழகத்தில் இருந்து சென்னையை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். இதனை அடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிலும் முக்கியமாக செங்கல்பட்டு சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று, அதிகாலை முதலே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டதாக கோயம்பேடு காவல்துறை உதவி ஆய்வாளர் ஜான் சுந்தர் தெரிவித்து உள்ளார்.







