கவிஞர் வைரமுத்து மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவந்த பாடகி சின்மயி metoo என்ற எழுச்சி முன்னெடுத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, metoo எழுச்சி ஆரம்பித்தவுடன் ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் எனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மெயிலுக்கு வந்தன.
அதில், 40 பேர் பிரபலங்கள். அனைவரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து எனக்கு மெசேஜ் அனுப்பி இதனை டுவிட் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர்.
நான் தற்போது வைரமுத்து மீது வைத்துள்ள பாலியல் குற்றசாட்டை பற்றி கேள்வி எழுப்பாமல், எதற்காக அப்போதே சொல்லவில்லை என கேட்கிறார்கள்.
தற்போது, பிரபலமான பாடகியாக இருக்கும்போது நான் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறேன், ஆனால், நான் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்கிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால், இதையே நான் அன்று கூறியிருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்?
வைரமுத்து மீது மரியாதை வைத்திருந்தேன். 2004 ஆம் ஆண்டு மேடை நிகழ்ச்சி ஒன்றில் நான் பாடினேன். அப்போது மேடையில் இருந்து கீழே இறங்கும்போது, யாரோ என்னை தள்ளிவிட்டார்கள். இதில் நான் மேடையில் இருந்து கீழே விழுந்ததில், எனது முட்டி தேய்ந்துபோனது.
எனது ஆடையில் கூட ஓட்டை விழுந்தது. நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன்,வைரமுத்து சார் எனக்கு போன் செய்தார். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
ஒரு பெரிய மனிதர் நமக்கு போன் செய்கிறாரே என்று. அவர் என்னிடம் இரண்டு விடயங்கள் தான் பேசினார். நான் பாடிய கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் மிகபிரபலமாகும் என்றும் அடிபட்டது குறித்து விசாரித்தார்.
இதனை கேட்டு எனது அம்மாகூட, இதுதான் பெரிய மனிதர் என்றார். இதுதான் அவரிடம் இருந்து வந்த முதல் போன்கால். ஆனால், அவர் மீதுள்ள புகார்களை முன்வைத்தால், அதுகுறித்து விசாரணை நடத்தாமல், எதற்காக அன்றே சொல்லவில்லை? எதற்காக திருமணத்திற்கு அழைத்தீர்கள்? என கேட்கிறார்கள் என கூறியுள்ளார்.