ஒற்றையாட்சிதான் வேண்டும்: டக்ளஸின் திடீர் கோரிக்கை!

அரசியல் நிர்ணய சபையாக கூடவுள்ள நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு வரைபு எதிர்வரும் 25ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 07ம் திகதியே நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு வரைபு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்றைய வழிநடத்தல் குழுவில் ஒற்றையாட்சி விவகாரத்தில் ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா கிளப்பிய சர்ச்சையையடுத்தே, இந்த இழுபறியேற்பட்டது.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூடியது. இதன்போது நாட்டின் சுபாவம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒற்றையாட்சியா, ஒருமித்த நாடா என்பது குழப்பமாக உள்ளது. இரண்டும் ஒரே அர்த்தமெனில் ஒற்றையாட்சியே குறிப்பிடப்பட வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இதன்போது குறுக்கிட்ட இரா.சம்பந்தன், அப்படியானால் நாடு பிளவுபடுவதையா விரும்புகிறீர்கள் என கேட்டார். இதற்கு இல்லையென பதிலளித்தார் டக்ளஸ்.

இந்த சமயத்தில் குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால அறிக்கை வெளியிடப்படுவதன் முன்னர் நீங்கள் ஒருமித்த நாடு என்ற சொல்லுக்கு பதிலாக ஒரு நாடு என்ற சொல்லை பயன்படுத்துமாறுதான் கூறினீர்கள். ஒற்றையாட்சி என்று கூறவில்லை. ஒருமித்த நாடா, ஒரு நாடா என்பதில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டே, ஒருமித்த நாடு என்பது குறிப்பிடப்பட்டது. உங்கள் ஒருவரை தவிர மிகுதி அனைவரும் ஒருமித்த நாடு என்றே வாக்களித்தனர். அதை பயன்படுத்துவதில் உங்கள் கட்சிக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என கேள்வியெழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட இரா.சம்பந்தன், இந்த கூட்டத்தை குழப்பும்படி யாரோ உங்களை அனுப்பியிருக்கிறார்கள் என டக்ளஸை பார்த்து கூறினார்.

டக்ளஸ் குறிப்பிட்டதை போல ஒருநாடு என்றே பயன்படுத்தலாமென சுமந்திரன் குறிப்பிட்டார். இதை ஆட்சேபித்த சம்பந்தன், “அப்படி முடியாது. ஒருவர் சொல்கிறார் என்பதற்காக மாற்ற முடியாது“ என சத்தமிட்டுள்ளார்.

ஒருநாடு அல்லது ஒருமித்த நாடு என்ற டக்ளஸின் கருத்தை அறிக்கையின் பின்னிணைப்பாக இணைக்கலாமென சுமந்திரன் குறிப்பிட்டார்.

இந்த குழப்பங்களையடுத்து, ஒருமித்த நாடு, ஒரு நாடு இரண்டினதும் தமிழ் விளக்கங்களை ஆராய வேண்டும், அரசியலரமைப்பு வரைபு நகலை முழுமையாக படிக்க நேரம் போதவில்லையென்றும் பொது எதிரணி எம்.பி தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

“குழப்ப வேண்டுமென திட்டமிட்டா இங்கு வந்தீர்கள்?“ என இரா.சம்பந்தன் அவரை பார்த்து கேட்க, “எதையும் ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு கையை தூக்க நாம் இங்கு வரவில்லை“ என தினேஷ் சூடாக பதிலளித்துள்ளார்.

இதையடுத்து வரம் 25ம் திகதி மீண்டும் வழிநடத்தல் குழுவை கூட்டுவதென்றும், நவம்பர் 7ம் திகதி அரசியலமைப்பு நிர்ணயசபையாக கூடும் நாடாளுமன்றில் அரசியலமைப்பு வரைபை சமர்ப்பிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.