சருமத்திற்கு மென்மையும், அழகும் சேர்க்கும் பன்னீரின் பயன்கள்!

ரோஜா தனது அழகாலும், நறுமணத்தால் பலரையும் ஈர்க்கும் தனித்துவம் பெற்றது. அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக பெண்கள் பயன்படுத்தும் பல்வேறு அழகு சாதன பொருட்களில் ரோஜா இதழ், பன்னீரின் அம்சங்கள் நிறைந்துள்ளன.
சருமத்திற்கு மென்மையும், அழகும் சேர்க்கும் பன்னீரின் பலவித பயன்களை பற்றி பார்க்கலாம்.

ஈரப்பதம் இல்லாத சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள ரோஜா இதழின் நீர் பயன்படுகிறது.இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பொருட்கள் சருமத்தை வலுப்படுத்தவும், சோர்வான தசைகளை புத்துணர்வு பெற வைக்கவும் பன்னீர் உதவுகிறது.

மேலும், சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கிறது.பன்னீர் சருமம் மட்டுமின்றி தலைமுடிக்கும் போஷாக்கு அளிக்கிறது. முடியை பட்டுப்போன்று வைக்கவும், பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு தரும்.

கண்களை சுத்தப்படுத்த சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்பாக இந்தியர்கள் பன்னீரை தான் பய்னபடுத்தியுள்ளனர்.

இது கண்ணில் இருக்கும் தூசிகளை வெளிக்கொண்டு வரவும், கண்களுக்கு கீழ் கருவளையம் வருவதை தடுக்கவும் உதவுகிறது.சரும எரிச்சல், வெயிலின் தாக்கம் போன்றவற்றால் ஏற்படும் சரும பிரச்னைகளுக்கும், அலர்ஜி உள்ளிட்டவற்றிற்கும் பன்னீர் உதவுகிறது.

தினசரி பயன்படுத்தும் கிரீம்களில் பன்னீரை கலந்து உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்.அழுக்கு படிந்த முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புத்துணர்வு அளிக்கும்.

முகப்பருக்களை போக்க பன்னீர் சிறந்த மருந்தாக திகழ்கிறது. எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை சம அளவு எடுத்துக் கொண்டு முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து இதமான நீரில் முகம் கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்தால் 2-3 வாரங்களில் முகப்பருக்கள், தழும்புகள் குறைந்து முகம் புதுப்பொலிவுடன் காணப்படும்.