மகாத்மாவை உருவாக்கியது தமிழர்கள்..! வெளியான உண்மை தகவல்..! மகாத்மா காந்தியும் மறைக்கப்பட்ட வரலாறும்!”
(கட்டாயம் படிக்க வேண்டிய நீண்ட பதிவு!)
மகாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று முன் தினம் நாடெங்கும் கொண்டாடப்பட்டது. ஆனால், இந்த நாளில், மகாத்மாவை உருவாக்கியது தமிழர்கள் தான், அவரது போராட்ட முறையை ஏற்று உயிரைத் தியாகம் செய்தவர்களும் தமிழர்கள் தான் என்கிற உண்மை யாராலும் பேசப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்!
“பொது நோக்கிற்காக சிறை செல்லாமலிருப்பது அவமானம் என்கிற மனப்பான்மை, தமிழ் சமூகத்தைத் தவிர வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரிடமும் இல்லை” – என்றார் மகாத்மா காந்தி! ஆனால், அந்த வீரவரலாறு மறைக்கப்பட்டது ஏன்?
“மகாத்மாவை உருவாக்கிய தமிழர்கள்”
மதுரையில் உள்ள ஹாஜீ மூசா நிறுவனத்தினரின் குஜராத் உறவினர்கள் மகாத்மா காந்தியை அவர்களது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்தார்கள். அவர்கள் 1893 ஆம் ஆண்டில் காந்தியை தென் ஆப்பிரிக்காவில் பணியாற்ற அனுப்பினார்கள். அங்கு காந்தி இருந்த 21 ஆண்டுகள் தான், அவரை மகாத்மாவாக மாற்றியது. தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் சொல்கேட்டு அவரது போராட்டத்தில் முன்நின்றவர்கள் மிகப்பெரும்பாலும் தமிழர்களே!
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். “காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் – ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை ‘உருவாக்கியது'” என்றார் அவர். 1925 ஆம் ஆண்டு கான்பூர் காங்கிரசு மாநாட்டில் பேசிய காந்தி “இப்போது என்னால் இந்தியாவுக்காக என்னென்ன பணிகளை எல்லாம் செய்ய முடிகின்றதோ, அவை எல்லாம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவை” என்று கூறினார்.
“தென் ஆப்பிரிக்க போராட்டம்: தமிழர்களின் போராட்டம்”
உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டமான ‘தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டம்’ என்பது உண்மையில் தமிழர்களின் போராட்டமாகவே நடந்தது. அதிலும் காவிரி வடிநிலப்பகுதியை சேர்ந்த, மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதி தமிழர்கள் தான் தென்னாப்பிரிக்காவில் அதிகம் இருந்தனர். அவர்களே போராட்டத்திலும் பங்கெடுத்தனர்.
(குஜராத் உள்ளிட்ட வட இந்தியர்களும் தமிழர்களுக்கு இணையான எண்ணிக்கையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்தாலும், அவர்கள் தமிழர்களைப் போன்று அதிக அளவில் போராட்டத்தில் பங்கேற்கவில்லை)
தமிழ் நாட்டிலிருந்து 7100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஜொகனெஸ்பர்க் நகரில், சூலு எனும் ஒரு ஆப்பிரிக்க மொழியும் ஆங்கிலமும் பேசப்படும் நாட்டில், அதிகம் கல்வி கற்காத ஏழை எளிய தமிழர்கள் காந்தியின் முதல் போராட்டத்தை முந்நின்று நடத்தினர்.
அப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய மூன்று பேரும் மயிலாடுதுறை பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
“தமிழர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக மற்ற இந்திய சமூகத்தினரை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த நன்றிக்கடன் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழர்கள் தம்மீதான புகழ் பேரொளியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு இந்தியர்கள் எப்படி இந்த நன்றி கடனை திருப்பியளிக்கப் போகிறார்கள்?
தமிழர்களிடம் இந்திய சமூகத்தினர் பாடம் கற்க வேண்டும். தமிழர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். தாய்நாட்டுக்காக அமைதியாக துன்பத்தை ஏற்பது எப்படி என்பதை இந்தியர்கள் தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இதை செய்யத் தவறினால் இந்தியர்கள் தமக்குத் தாமே பழியை சுமப்பார்கள்” என 22.10.1910 அன்று இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தி.
காந்தி தென் ஆப்பிரிக்காவை விட்டு 1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அவரது முதல் இந்தியப் பயணமாக 1915 ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தார் காந்தி.
1915 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று பர்மாவின் ரங்கூன் நகரில் தி இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த காந்தி “தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைக்கு செல்லாவிட்டால் அது தமக்கு அவமானம் என தமிழர்கள் ஒவ்வொருவரும் நினைத்தனர். பொது நோக்கிற்காக சிறை செல்லாமலிருப்பது அவமானம் என்கிற இந்த மனப்பான்மை தமிழ் சமூகத்தைத் தவிர வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரிடமும் இல்லை. நான் முதன்முதலாக தமிழ் சமூகத்தினரை சந்தித்த போது அவர்களை நினைத்து பெருமிதம் அடைந்தேன். அடுத்தடுத்த சந்திப்புகளின் அவர்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. நான் என்னை வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரை விடவும் தமிழர்களுடன் தான் இணைத்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார் காந்தி.
“சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் தியாகி”
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரக காலகட்டத்தில் “தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்” என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால் 21.06.1909 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. சிறைச்சாலை சித்திரவதைகளால், ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக 30.06.1909 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 06.07.1909 ஆம் நாள் மரணத்தை தழுவினார். இதுதான் மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப்போரின் முதல் களப்பலி ஆகும்.
“சாமி நாகப்பன் படையாட்சிக்கு காந்தியின் புகழாரங்கள்”
சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் வீரமரணம் அடைந்த போது காந்தி இங்கிலாந்தில் இருந்தார். இச்செய்தி அவருக்கு சூலை 12 ஆம் நாள் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 1909
இந்தியாவில் பிரச்சாரம் செய்துவந்த எச்.எசு.போலக் என்பவருக்கு 6.10.1909 அன்று லண்டனிலிருந்து காந்தி எழுதிய கடிதத்தில்:
“நீங்கள் நாகப்பன் நிழற்படம் கிடைக்கப் பெற்றிருப்பீர்கள். அதனை பத்திரிகைகளில் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள். சென்னையிலிருந்து வெளியாகும் இந்தியன் ரிவியூ மற்றும் இதர சென்னை பத்திரிகைகளில் தயவுசெய்து நாகப்பன் புகைப்படத்தை வெளியிட முயலுங்கள்” என்று கேட்டிருந்தார்.
கூடவே, “நாகப்பன் பெயரில் ஒரு கல்வி உதவித்தொகை வழங்கும் நினைவு நிதியைத் ஜொகனஸ்பர்க் நகரில் தொடங்க வேண்டும். அதுபோல பம்பாயிலும் சென்னையிலும் கூட நாகப்பன் நினைவு நிதி தொடங்க முடிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் அப்பழுக்கில்லாத இருபது வயது இளைஞன் இந்த நாட்டுக்காக உயிர்நீத்தான் என்பதை மக்கள் உணரச்செய்ய வேண்டும்” என்று லண்டனிலிருந்து காந்தி குறிப்பிட்டார்.
நவம்பர் 1909
தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டம் குறித்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பிரச்சாரம் செய்ய அனுப்பபட்டிருந்த குழுக்களின் செயல்பாடுகள் குறித்து நவம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னர் எழுதினார் காந்தி. அச்சமயத்தில் காந்தியின் மகன் அரிலால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
“பல இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் போது நானும் எனது மகனும் சுதந்திரமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. இப்போது எனது மகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனை எனக்கு தெரிவித்த திருமதி. போலக், என் மனமறிந்து இதற்காக பாராட்டும்கூறி தந்தி அனுப்பியுள்ளார். சிறையில் என் மகன் துன்பப்படுவான் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அவன் கைதானதை நான் வரவேற்கிறேன். அவன் துன்பப்படுவது நல்லதுதான்.
நாகப்பா, நீயும் ஒரு குழந்தைதான், தாய் நாட்டுக்காக நீ உன் உயிரையே தியாகம் செய்தாய். உனது தியாகம் உன் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாகும். நீ இறந்தாலும் என்றென்றும் வாழ்கிறாய் என நான் நம்புகிறேன். அப்படி இருக்கும்போது, நான் என்னுடைய மகனின் சிறைவாசத்திற்காக ஏன் வருத்தப்படப் போகிறேன்?” என்று எழுதினார் காந்தி. கூடவே, நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால் தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்பதாக எழுதினார் காந்தி. இக்கடிதம் 4.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.
25.11.1909 அன்று தூதுக்குழுவினரின் நடவடிக்கைகள் குறித்து லண்டனில் இருந்து கட்டுரை எழுதிய காந்தி, தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டுரையில் கூறும்போது, “போராட்டத்தை கைவிடுவதற்கு பதிலாக மரணத்தை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டிராமல் போராட வேண்டும். ஒவ்வொருவரும் தானும் ஒரு நாகப்பனாக ஆகவேண்டும் என விரும்ப வேண்டும்” என்று கூறினார் காந்தி. இக்கட்டுரை 18.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.
டிசம்பர் 1909
1909 நவம்பர் 30 அன்று தனது லண்டன் தூதுப் பயணத்தை முடித்து தென் ஆப்பிரிக்கா வந்துசேர்ந்தார் காந்தி. 5.12.1909 அன்று ஜொகனஸ்பர்க் நகரிலும் 20.12.1909 அன்று டர்பன் நகரிலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டங்களில் “நாகப்பன் வகுத்துச் சென்ற முன்னுதாரணத்திலிருந்து நாம் எப்படி பின்வாங்க முடியும்? அவரது தியாக நினைவை ஏந்தி, வெற்றி கிடைக்கும் வரை போராடித்தான் ஆக வேண்டும்” என்று பேசினார் காந்தி.
அவரது இப்பேச்சு 6.12.1909 அன்று ராண்ட் டெய்லி மெயில், 11.12.1909 மற்றும் 25.12.1909 இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகைகளில் வெளியானது.
அக்டோபர் 1910
1910 ஆம் ஆண்டு நாராயணசாமி எனும் மற்றொரு தமிழர் சத்தியாகிரகப் போரில் உயிர் நீத்தார். நாராயணசாமியின் மரணம் குறித்து 17.10.1910 ஆன்று பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ராண்ட் டெய்லி மெயில் மற்றும் தி டிரான்சுவால் லீடர் ஆகிய பத்திரிகைகளில் 18.10.1910 அன்றும், இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் 22.10.1910 அன்று இக்கடிதம் வெளியானது. இது குறித்து இந்தியன் ஒப்பீனியனில் தனியாகவும் ஒரு கட்டுரை எழுதினார் காந்தி.
இவற்றில் “நாகப்பனை அரசாங்கம் சட்டபூர்வமாகக் கொலை செய்தது. அதே போன்றுதான் நாராயணசாமியும் கொல்லப்பட்டுள்ளார்” என்று கூறினார். கூடவே, தமிழ் சமூகத்தினரின் வீரத்தை புகழ்ந்து எழுதியிருந்தார்.
நவம்பர் 1911
15.11.1911 அன்று திருமதி. வோகல் என்பவருக்கு பாராட்டு பத்திரம் எழுதினார் காந்தி. இதில் ஜொகனஸ்பர்கின் 14 பெண்மணிகள் கையொப்பமிட்டிருந்தனர். திருமதி. வோகல் ‘பசார்’ எனும் ஒரு விற்பனை திட்டத்தை ஜொகனஸ்பர்க் நகரில் தொடங்கியிருந்தார். இதன் வருமானத்தின் மூலம் சாமி நாகப்பன் படையாட்சியின் பெயரில் ஒரு கல்வி உதவி நிதியத்தை அமைக்க வேண்டும் என்பதே திருமதி. வோகலின் இலக்காகும். இதனைப் பாராட்டிதான் காந்தியும் ஜொகனஸ்பர்க் பெண்மணிகளும் பாராட்டு பத்திரம் அளித்தனர். (9.12.1911 வரை நாகப்பன் நினைவு நிதிக்காக 138 பவுண்ட் நிதி திரட்டப்பட்டிருந்தது.)
சூன் 1912
நாகப்பன் நினைவு நிதிக்காக திருமதி. வோகல் நடத்திய ‘பசார்’ திட்டம் வெற்றிகரமாக நடந்ததாகக் கருதப்பட்டது. எனினும் நினைவு நிதி அமைக்க அதிக பணம் தேவை என்பதால் டிரான்சுவால் இந்திய பெண்கள் சங்கத்தின் செயலாளர் செல்வி. செலேசின் இந்தியாவில் வாழும் பெண்கள் தங்களது கைவினைப் பொருட்களை ‘பசாருக்கு’ அனுப்ப வேண்டும் என்று 14.6.1912 அன்று கடிதம் எழுதினார்.
இதனை ஆதரித்து காந்தி 22.6.1912 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார். நாகப்பனின் மாபெரும் தியாகத்தை நினைவு கூறும் வைகையில் திருமதி. வோகல் இந்த அரும்பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு இங்கிலாந்திலும் இந்தியாவிலும் வாழும் பெண்கள் தாராளமாக உதவ வேண்டும் என்று காந்தி எழுதினார்.
(எனினும், 1912 ஆம் ஆண்டிற்கு பின்னர் ‘சாமி நாகப்பன் படையாட்சி நினைவு நிதி’ அமைக்கும் முயற்சிகள் என்னவாயின என்பது தெரியவில்லை.)
மார்ச் 1914
1914 ஆம் ஆண்டு காந்தியின் சகோதரர் இந்தியாவில் மரணமடைந்தார். இச்செய்தி கேள்விப்பட்டு தென் ஆப்பிரிக்கா முழுவதுமிருந்து பலர் காந்திக்கு இரங்கல் செய்தி அனுப்பினர். இதற்கு நன்றி தெரிவித்து இந்தியன் ஒப்பீனியனில் 18.3.1914 இல் எழுதினார் காந்தி. அதில் “நாகப்பனின் மரணத்தை விட எனது சகோதரனின் மரணம் எனக்கு அதிக வலிமிகுந்ததாக இல்லை” என்று குறிப்பிட்டார் காந்தி.
சூலை 1914
எட்டாண்டு போராட்டத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டம் 1914 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருந்தது. இதுகுறித்து 8.7.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியான வெற்றிக் கட்டுரையில் நாகப்பன், நாராயணசாமி, அர்பத்சிங், வள்ளியம்மா ஆகியோரின் உயிர்த் தியாகம்தான் போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது
9.7.1914 அன்று டர்பன் நகரில் நடந்த குசராத் சபா கூட்டத்தில் பேசிய காந்தி – தென் அப்பிரிக்க இந்திய வம்சாவழியனரால் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் ஏழைகளாலும் சாதாரண மக்களாலும் நடத்தப்பட்டது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆவதிலேயே குறியாக இருந்தனர். எனது சகோதரன் நாகப்பன், எனது சகோதரி வள்ளியம்மா, எனது சகோதரன் நாராயணசாமி ஆகியோரின் காலடித்தடங்களை இந்தியர்கள் பின்பற்றி நடக்க வற்புறுத்துகிறேன், என்று பேசினார். இச்செய்தி 15.7.1914 இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.
காந்தி தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்க்கையை முடித்துக்கொண்டு, நிரந்தரமாக இந்தியாவுக்கு திரும்பும் நிலையில் அவருக்கு வழியனுப்பும் கூட்டம் 14.7.1914 அன்று ஜொகனஸ்பர்க் நகரில் நடத்தப்பட்டது. அங்கு பேசிய காந்தி இந்த ஜொகஸ்பர்க் நகரம்தான் ‘நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மா எனும் பதின்வயதினரை தந்தது’ என்று பேசினார்.
15.7.1914: தென் ஆப்பிரிக்காவில் காந்தி பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி 15.7.1914 அன்று காலை 11.30 மணிக்கு ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத்தோட்டத்தில் நடந்தது. அங்கு அவர் சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய இருவரது கல்லறைகளில் நினைவுப் பலகைகளைத் திறந்து வைத்தார்.
அங்கு பேசிய காந்தி, “நாகப்பன் முகத்தை என்னால் சரிவர நினைவு கூற முடியாமல் போகலாம். ஆனால், அவர் பட்ட துன்பத்தை என்னால் உணர முடிகிறது. கொடுமையான சிறைக்கொட்டடியில் கடும் குளிரில் அவர் தேவையில்லாமல் அலைகழிக்கப்பட்டார். நாகப்பன் இதயம் இரும்பினால் ஆனது. அவர் சிறையிலிருது உருக்குலைந்து இறக்கும் தருவாயில் வெளியேறினார். ஆனால், அந்த நிலையிலும் – எனக்கு இத்துன்பம் ஒரு பொருட்டே அல்ல, ஒரு முறைதான் சாகப்போகிறேன். இப்போதும் மறுபடியும் சிறைசெல்ல தயாராக இருக்கிறேன் – என்று துணிந்து சொன்னார். அப்படிப்பட்ட கலங்காத மனம் படைத்த நாகப்பன் இறந்துவிட்டார். ஆனாலும், அவர் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் என்றென்றும் நீங்காது வாழ்வார்” என்றார் காந்தி. இச்செய்தி 27.7.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.
ஆகஸ்ட் 1914
தென் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு பயணப்பட்டார். 4.8.1914 அன்று லண்டனில் காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கஸ்தூரிபா, சரோஜினி நாயுடு, லாலா லஜபதி ராய், முகமது அலி ஜின்னா ஆகியோர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கும் ‘சென்னை மாகானத்தைச் சேர்ந்த வீரமிக்க நாகப்பன் சிறையில் கொடுமைகள் அனுபவித்து வீரமரணம் அடைந்ததை புகழ்ந்தார். இச்செய்தி 30.9.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.
ஏப்ரல் 1915
இந்தியாவுக்கு திரும்பிய காந்திக்கு ஏப்ரல் 1915இல் சென்னை நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி.ஏ.நடேசன், சுப்பிரமணிய அய்யர், அன்னி பெசண்ட், சீனிவாச சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் ‘நாகப்பன் தியாகத்தை’ புகழ்ந்து பேசினார் காந்தி. இச்செய்தி 21.4.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது.
மார்ச் 1918
அகமதாபாத் மில் தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபட ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஏக் தர்மயுத்தா’ எனும் குஜராத்தி பத்திரிகையில் எழுதினார் காந்தி. 6.3.1918 அன்று எழுதிய கட்டுரையில் நாகப்பன் தியாகத்தை முன்மாதிரியாக எடுத்துக்காட்டினார்.
மார்ச் 1919
மதுரை: 1919 ஆம் ஆண்டில் ரௌலட் சட்டத்திற்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார் காந்தி. இதற்காக 26.3.1919 அன்று மதுரையில் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய காந்தி “நாகப்பன் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தார். அவர் எதற்காக அப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. சத்தியாகிரகப் போராட்டத்தின் மீது அவர் உள்ளார்ந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதுமட்டும்தான் தீர்வு என நம்பினார்.
தென் ஆப்பிரிக்காவில் நிலவும் காலநிலை இந்திய சமவெளிகளில் நிலவும் காலநிலையைப் போன்றது அல்ல. அந்த நாட்டில் கடும் குளிராக இருக்கும். அதிலும் குளிர்காலத்தில் நாகப்பன் சிறையில் அடைக்கப்பட்டார். கடும் குளிரில் முகாம் சிறையின் திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடுமையான வேலை கொடுக்கப்பட்டது.
நாகப்பன் நினைத்திருந்தால் அவர் எப்போது வேண்டுமென்றாலும் தண்டத்தொகையை (3 பவுண்ட்) கட்டிவிட்டு வெளியே வந்திருக்க முடியும். அவ்வாறு வெளியே வர அவர் விரும்பவில்லை. ஏனெனில், சுதந்திரத்தின் வழி சிறைச்சாலையின் உள்ளே போகும் கதவுகளில் இருப்பதாக அவர் நம்பினார். சிறையில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் மற்றும் குளிரால் அவர் இறந்தார்.
நாகப்பன் கல்வியறிவு அதிகம் பெறாதவர். சாதாரண பெற்றோருக்கு பிறந்தவர். ஆனால், அவர் வீர நெஞ்சம் கொண்டிருந்தார். எனவே, ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரும் நாகப்பனை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்” என்று பேசினார் காந்தி. இச்செய்தி 29.3.1919 அன்று தி இந்து நாளிதழில் வெளியானது.
1919 மார்ச் 28 அன்று தூத்துக்குடியிலும், மார்ச் 29 அன்று நாகப்பட்டிணத்திலும் ரௌலட் சட்ட எதிர்ப்பு குறித்து காந்தி பேசினார். அங்கும் நாகப்பன் தியாகத்தை புகழ்ந்தார். இச்செய்தி முறையே 2.4.1919 மற்றும் 3.4.1919 தி இந்து நாளிதழில் வெளியானது.
1928
இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் ‘தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்’ எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.
“நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.
நாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.
நம்முடைய தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும் துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.
கற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்” என்று எழுதியிருக்கிறார் காந்தி.
மகாத்மா காந்தியால் “இறந்தாலும் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் என்றென்றும் நீங்காது வாழ்வார்” என்று புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா?
காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையை ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?
நன்றி : பசுமை தாயகம் அருள்.