பாலியல் வன்கொடுமையை தடுக்கும் விதமாக மத்திய அரசு மரண தண்டனை கொடுக்கப்படும் என்று சட்டம் இயற்றிய பின்பும், நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருவது அதிர்ச்சியாகவே உள்ளது.
அரியானா மாநிலத்தில், சிபிஎஸ்சி. தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது வாங்கிய 19 வயது மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அதே மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறை அதிகாரிகள் உட்பட 18 பேர் சேர்ந்து தாயையும் மகளையும் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம், கைதால் மாவட்டத்தின், சர்பஞ் எனும் கிராமத்தை சேர்ந்த ஒரு தாயையும், அவரின் 16 வயது அவரது மகளையும் 7 போலீசார் உள்பட 18 பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
அந்த சிறுமி அளித்த புகாரில், ”கடந்த மாதம், எனது தயை மிரட்டி, துணை காவல் ஆய்வாளர் ஒருவருடன் சேர்ந்து தலைமை காவலர் உட்பட 7 காவல் அதிகாரிகள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்றும், பின் அந்த சிறுமியையும் அவர்கள் சீரழித்துள்ளதாகவும், மேலும், 9 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாக” சிறுமியின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சிறுமியின் புகார் அடிப்படையில், காவல் அதிகாரிகள் உட்பட 18 மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விசாரணை செய்ய டிஎஸ்பி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்