அதிர்ச்சியிலும், வேதனையிலும் கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்!

காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் ஏற்பட்ட வறட்சியால் பயிர்கள் கருகியதை தாங்கிக் கொள்ள முடியாத இராமமூர்த்தி என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இராமமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த தலையாமழை கிராமத்தைச் சேர்ந்த இராமமூர்த்தி என்ற உழவர் அப்பகுதியில் 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால், கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் அவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகின. கடன் வாங்கி குறுவை நெல் சாகுபடி செய்திருந்த நிலையில் பயிர்கள் கருகியதால் வேதனையடைந்த இராமமூர்த்தி, வாங்கிய கடனை அடைக்க முடியாதே என்ற அதிர்ச்சியில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆதமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற விவசாயியும் பயிர்கள் கருகியதால் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஒரே மாவட்டத்தில் ஒரு சில நாட்கள் இடைவெளியில், இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சாதாரண நிகழ்வாகக் கருதி கடந்து செல்ல முடியாது. காவிரி கடைமடை பாசன மாவட்டங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிக் கொண்டிருக்கின்றன. பயிர்கள் கருகியதால் இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்னும் ஏராளமான உழவர்கள் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டு செல்லாத பினாமி அரசு தான் உழவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது.

அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் நடப்பாண்டில் மேட்டூர் அணை மொத்தம் நான்கு முறை நிரம்பியது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் 170 டி.எம்.சி. நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக வங்கக் கடலில் கலந்தது. ஆனாலும், மேட்டூர் அணை திறக்கப்பட்டு இன்றுடன் 68 நாட்களான நிலையில் இதுவரை கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி, உடனடியாக தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை நான் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் உண்மையான அக்கறையுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவிரி ஆற்றின் பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படாததும், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் விதிகளை மீறி 30 முதல் 50 அடி ஆழத்திற்கு மணலை வெட்டி எடுத்ததும் தான் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததற்கு காரணம் ஆகும். பாசனக் கால்வாய்களை தூர்வாரும்படி பல முறை வலியுறுத்தியும் பயனில்லை. கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்ய காவிரி பாசன மாவட்டங்களுக்கு இ.ஆ.ப. அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அதனால் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் குறைந்த பின்னர் மணல் கொள்ளை மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதிலிருந்தே தமிழக ஆட்சியாளர்கள் யார் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததற்கு தமிழக அரசு தான் காரணம். அதனால், நாகை மாவட்டத்தில் இரு விவசாயிகளின் தற்கொலைக்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட இரு விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, பாசனக் கால்வாய்கள் அனைத்தையும் தூர் வாருவதுடன், காவிரியில் மணல் அள்ளவும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் எனவும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.