பேஸ்புக் நிறுவனத்தில் வேலையில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலமான பேஸ்புக் நிறுவனத்தின் மீது புகார் ஒன்று எழுந்துள்ளது. வேலை வாய்ப்பு சம உரிமை ஆணையத்தில் வேலை தேடும் பெண்கள் சிலர், பேஸ்புக் நிறுவனத்தின் மீதும், அதில் வேலை செய்யும் ஊழியர்கள் 9 பேரின் மீதும் புகார் அளித்துள்ளனர்.
அதாவது வேலை வாய்ப்பில் பெண்களைப் புறக்கணிக்கும் வகையிலும், ஆண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் வகையிலும் விளம்பரங்களை வெளியிட, பேஸ்புக் பிற நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறிய புகாரில், வேலை வாய்ப்பில் பாலின அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதை தடைசெய்யும் சட்டத்தை மீறும் வகையில், பேஸ்புக் நிறுவனம் நடந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் மீதான இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.