திமுக வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

திராவிட இயக்க இலட்சியப் பூக்காடாக, தமிழர்களின் மனங்கவர்ந்து மணம் கமழும் திராவிட முன்னேற்றக் கழகத்தை, அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் எதையாவது சொல்லி, எப்படியாவது முயற்சி செய்து, அதைத் தேக்க நிலைக்குக் கொண்டு வந்து விடலாம் அல்லது திசை திருப்பித் திணற வைத்து விடலாம் அல்லது சிதைத்து விடலாம் என்று கனவு காண்பவர்கள், தங்களுடைய காரியத்தை இப்போதும் கைவிட்டுவிட வில்லை . தி.மு.கழகம் ஒன்றும் மண்வீடல்ல; சாரலுக்கே சரிந்து விழுந்து விடுவதற்கு. இந்தப் பேரியக்கம், புயல் அடித்தாலும், பூகம்பம் ஏற்பட்டாலும், தன்னைத் தானே காப்பாற்றி நிலைநிறுத்திக் கொள்ளும் அதிஅற்புதமான ஆற்றல் கொண்டது.

இந்த இயக்கத்தைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, நமது ஜென்ம எதிரிகள், கழகத்தை வீழ்த்திவிட கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து பார்த்தார்கள். அண்ணா அவர்கள் மறைந்தபிறகு, கலைஞர் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றதும், இந்த இயக்கம் அவ்வளவுதான், ‘அல்ப ஆயுசு’ என்று சாபம் கொடுத்துப் பார்த்தார்கள்; மறைந்திருந்து தாக்கினார்கள்; நேரடியாகவே களத்தில் குதித்து நெஞ்சைக் குறிவைத்தார்கள்; எதுவும் நடக்கவில்லை என்பதால், இறுதியில் ஏமாந்துதான் போனார்கள்.

இப்போதும், தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்குப் பின்னர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருமனதுடன் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகும், கழகத்தின் மீது கொள்கை ரீதியாகக் குறி வைத்துப் பார்க்கிறார்கள்; அதன் மூலமாகத் திக்குமுக்காடச் செய்து திசை திருப்பி விட முடியாதா என்ற நப்பாசையுடன், ஊடகத் துறையிலே உள்ள ஒரு சிலர் – கழகம் என்றாலே ஒரு வகை ஒவ்வாமையினால் அவதிப்படுபவர்கள் – முதல் அம்பினை எய்திருக்கிறார்கள்.

தி.மு.கழகம், எந்தப் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்ய முடியாத, நெருக்கடி யானதொரு சந்திப்பிலே நின்று, தயங்கிக் கொண்டிருக்கிறது; பா.ஜ.க. இந்து தேசியத்தையும், தி.மு.க. தமிழ் தேசியத்தையும் முன்னிறுத்து வதாலும்; தி.மு.க. தீண்டாமை – சாதிப்பாகுபாடுகளை ஒழித்து, சூத்திரர்களின் சுயமரியாதையை நிலைநாட்டி, இந்த மண்ணுக்கே உரித்தான திராவிட அடையாளத்தை ஆழ்மனதில் செதுக்கி வைத்திருப்பதாலும்; ஆர்.எஸ்.எஸ்.ஸை ஊற்றுக் கண்ணாகக் கொண்டிருக்கும் பா.ஜ.க. இந்து என்ற அடையா ளத்தைக் கைவிடாமல், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர்க்கு எவ்வித சுதந்திர மான அடையாளமோ அல்லது தன்னாட்சி அதிகாரமோ கூடாது என்பதைப் பிரதிபலிப்ப தாலும்; எந்த மாதிரியான பாதையை தளபதி மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுப்பார் என்ற அய்யப்பாட்டினை இந்த வாரத் தொடக்கத்தில் எழுப்பியிருக்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள்.

மேலும் தேர்தல் வெற்றிகளுக்காக, சித்தாந்த வேறுபாடுகளைச் சமாதானம் செய்து கொள்ளத்தான் வேண்டும்; அந்த ஜனநாயக நடைமுறை உண்மையை உணர்ந்துதான் தலைவர் கலைஞர், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்; அதைப்போல தி.மு.க.வின் இப்போதைய தலைமையும் அனைத்துச் சாதகபாதகங்களையும் அலசிப் பார்த்து, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகாவது – பா.ஜ.க. மீண்டும் மத்திய ஆட்சியில் அமர்ந்திட நேர்ந்தால் – அதை ஆதரிக்கும்படியான தேவையைப் பரிசீலிக்கும் என்றெல்லாம் சிலர் எழுதுகிறார்கள்; எழுதி இன்பம் கொள்கிறார்கள்.

“தி.மு.க.வினரான நாங்கள், சமூக வாழ்க்கையிலோ, அரசியலிலோ தீண்டாமை யைப் பின்பற்றுவதில்லை” என்று 1998-ல் முரசொலி மாறன் அவர்கள் சொன்னதையும், “வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி கொண்டோம். அவர் தமிழர்களின் கோரிக்கைகளை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் 2013-ல் குறிப்பிட்டதையும்; “மோடி, தேர்தல் பிரச்சாரத்தில் எவ்வளவு கடின மாக உழைக்கிறார். அவர் எனக்கு நல்ல நண்பர்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் 2014-ல் கூறியதையும்; இப்போது நமக்கு நினைவுபடுத்துகிறார்கள் என்றால், அப்படி நினைவுபடுத்துவோரின் அடிப்படை நோக்கம் என்ன?
1944-ஆம் ஆண்டு, செப்டம்பர் 29 அன்று, திருச்சியில் டி. பி.வேதாச்சலம் அவர்களின் இல்லத்தில், தந்தை பெரியார் – இந்து மஹா சபையின் தலைவராக இருந்த டாக்டர் பாலகிருஷ்ண ஷிவ்ராம் மூஞ்சே சந்திப்பைப் பற்றியும், அப்போது அறிஞர் அண்ணா அவர்கள் உடனிருந்தார் என்றும்,

அந்தச் சந்திப்பில், இந்து என்பதை மதத்தை அடிப்படையாகக் கொண்டு பொருள் கொள்ளாமல், இந்தியர் அனைவரையும் குறிப்பிடுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட இணக்கமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இப்போது சிலர் எடுத்துக் காட்டுகிறார்கள்.

இப்படியெல்லாம் தூபம் போடுவார்கள்; சித்தாந்தக் குழப்பத்தை ஏற்படுத்து வார்கள்; சித்தாந்தமா, தேர்தல் வெற்றியா என்று ஆசை காட்டி அலைக் கழிப்பார்கள்; என்ற சித்து வேலைகளை எல்லாம் சிந்தனை செய்து பார்த்த பிறகுதான், ஆணி அடித்ததைப் போல, கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், “இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்ட, வா!” என்று 28.8.2018 அன்று நடந்த கழகத்தின் பொதுக்குழுவில் பிரகடனம் செய்து, அழைப்பு விடுத்தார். இப்படி ஒரு முறைதானா? “மாநிலத்தை ஆளுகின்ற இந்தக் கொள்ளைக் கூட்டத்தையும், அவர்களைக் காப்பாற்றக்கூடிய வகையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதவாத, சர்வாதிகார, இரட்டைவேட பா.ஜ.க. அரசையும் ஜனநாயகக் களத்தில் வீழ்த்துவது ஒன்றுதான் நம்முடைய தற்போதைய இலக்கு” என்று விழுப்புரம் – முப்பெரும் விழா மாநாட்டில், 15.9.2018 அன்று, அய்யந்திரிபறத் தெளிவுபடுத்தியிருக்கிறார், கழகத் தலைவர்.

மேலும் 18.9.2018 அன்று சேலம் மாநகரில், ஊழல் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திலும், அ.தி.மு.க. அரசையும் பா.ஜ.க. அரசையும் தூக்கி எறிந்திட வேண்டும் என்று, மூன்று வாரங்களில் மூன்று முறை, திரும்பத் திரும்பச் சொல்லி, கழகத்தின் நிலைப்பாட்டை உறுதி செய்து, அனைவரையும் அறைகூவி அழைத்திருக்கிறார்!

கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் இலக்கும், செயல் திட்டமும் – நோக்கமும் வாக்கும் தெளிவானவை; திட்பமானவை; அவற்றில் இரண்டு பொருள்களுக்கு இடமே இல்லை; கழகத் தோழர்களும், தமிழ் மக்களும் இதைச் சரியாகவே புரிந்து கொண்டுள்ளார்கள். ஒவ்வாமை யினால், ஒரு சிலர் செய்யும் உள்நோக்கம் கொண்ட விமர்சனம், காலைக்கதிர் கண்ட பனித்துளியெனக் கரைந்து போய்விடும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.