கோட்டாவைக் கொல்லச் சதி: விசாரணை கோருகின்றார் மகிந்த ராஜபக்ஷ

“பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை படுகொலை செய்வதற்கு சூழ்ச்சி வகுக்கப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் அரசு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

கெப்பட்டிகொல்லாவ பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபயவைச் கொலை செய்வதற்கு சூழ்ச்சி வகுக்கப்பட்டது என வெளியாகியுள்ள தகவலானது படுபயங்கரமானதாகும். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும். ஆனால், இந்த விடயத்தில் அரசு இன்னும் உரிய வகையில் செயற்பட்டதாகத் தெரியவில்லை.

பண்டாரநாயக்கவின் காலத்திலும் இதே போன்று சூழ்ச்சி வகுக்கப்பட்டது. விடயம் வெளியே தெரிந்த பின்னர் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதன்பின்னரே விசாரணைகள் நடந்தன” – என்றார்.