இயற்கை அன்னையின் மடியில் சமாதானமாய் வாழ்வது ஒன்றே நம் அனைவர் மனதிலும் இருக்கும் ஆழமான ஆசை. வெற்றிகரமான வேலை, ஆடம்பரமான வாழ்க்கை, புகழ், செல்வம் இவையும் கூடுதலாக வேண்டும் என்று எண்ணும் மக்களும் உள்ளனர்.ஒவ்வொரு ஹிந்துவும் கர்மம், தர்மம் இவற்றின் முக்கியவத்துவத்தை அறிவார்கள். இரண்டுக்குமிடையே சமநிலை பேணி சென்றால்தான் பேறு கிடைக்கும். நம்முடைய எல்லா வினைகளின் பயனையும் கட்டுப்படுத்தக்கூடிய தெய்வீக சக்தி ஒன்று உள்ளது.
தான் நம்பும் தெய்வத்திற்கு அல்லது தெய்வீக சக்திக்கு பக்தன் ஒருவன் வழிபாடு செய்வதே பூஜை. பஜனை பாடல், மந்திரங்கள், அர்ச்சனைகள், சடங்குகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் பூஜையில் உண்டு. ஹிந்து நம்பிக்கையுள்ள பக்தனோ, பக்தையோ தன் தெய்வத்தோடு தொடர்பு கொள்ளும் தெய்வீக வழியே பூஜை.
பூஜை
பக்தியுள்ள ஹிந்துவின் வாழ்க்கையில் பூஜைக்கு முக்கிய இடம் உண்டு. என்னதான் பரபரப்பாக ஓய்வில்லாத வாழ்க்கையாக இருந்தாலும் கடவுளின் அனுக்கிரகத்தை பெற்று வாழ பூஜையை தவறாமல் செய்து விடும் பழக்கம் உள்ளது. தெய்வங்களின் ஆசியை பூஜை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது என்று புனித நூல்கள் கூறுகின்றன. உண்மையான பக்தியோடு, மனதை ஒருமுகப்படுத்தி பூஜை செய்வோரின் விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
கணபதி பூஜை
ஹிந்தத்துவ நம்பிக்கையில் கணபதி என்னும் பிள்ளையார் முக்கியமான தெய்வம். முதலாவது கணபதியை தொழுகொள்ளாத பூஜையே கிடையாது. பிரத்தியேகமாக பிள்ளையாருக்கென்று செய்யப்படும் பூஜை, ஆரோக்கியம், செல்வம், செழிப்பு மற்றும் காரிய வெற்றி ஆகிய நன்மைகளை பக்தருக்கு அளிக்கும்.
லட்சுமி பூஜை
சக்தியின் முக்கிய வடிவான மகா லட்சுமி வழிபடும் பக்தர்கள் அநேகர். கலைமகள், அலைமகள், மலைமகள் அல்லது சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்று முப்பெரும்தேவியர் ஹிந்து நம்பிக்கையில் உள்ளனர். செல்வத்தின் தெய்வமான லட்சுமியை வழிபடுவோருக்கு பல பாக்கியங்கள் நிறைவாக வந்து சேரும்.
சனி பகவான் பூஜை
சனி தோஷத்தை போக்குவதற்கு சிங்நாக்பூரிலுள்ள சுயம்புவான சனி பகவானுக்கு எண்ணெய் வார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. திருமணம் மற்றும் தனி வாழ்க்கை பிரச்னைகளை கொண்டு வரும் கர்ம வினைகளை தீர்ப்பதற்கும், சனி தோஷத்தை போக்குவதற்கும் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் சிங்நாக்பூருக்கு வந்து அபிஷேகம் செய்கின்றனர்.
பூமிலிங்க பூஜை
சிவபெருமானுக்கு செய்யப்படும் பூஜையே பூமிலிங்க பூஜை. மணல் அல்லது களிமண்ணால் செய்யப்படுவது பூமிலிங்கம். கங்கை கரையோரம் 108 லிங்கங்கள் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது. ஓம்கரேஸ்வரர் அல்லது காசி ஜோதிலிங்க கோயில்களில் செய்யப்படும் பூஜைகள் பல நன்மைகள் தருகிறது. கிரக தோஷம், நோய், துரதிர்ஷ்டம், விபத்து ஆகியவற்றிலிருந்து காக்கும் இந்த பூஜைகள் மன அழுத்தத்தையும் போக்கும்.
மஹா ம்ருத்யுஞ்சய மந்திர ஜபம்
சக்தி வாய்ந்த சிவ மந்திரங்களுள் ஒன்று மஹா ம்ருத்யுஞ்சய மந்திரமாகும். சிவபெருமானின் அருள்பெறுவதில் இது துணை செய்யும். எல்லா எதிர் ஆவிகளின் வல்லமையையும் அழிப்பதோடு, குடும்பத்திற்கு பாதுகாப்பு கவசமாக அமைந்து, உற்சாகத்தோடு வாழ உதவும்.
சத்யநாராயண யாகம்
விஷ்ணுவின் முக்கியமான ஓர் அவதாரம் சத்யநாராயணன். சத்தியத்தின் உருவகமான இந்த அவதாரம் விஷ்ணு என்னும் திருமால் பக்தர்களின் மத்தியில் பிரபலமானது. சத்யநாராயண பூஜையை பௌர்ணமியன்று செய்தால் முழு பலன் கிடைக்கும். சரீர, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வாழ்க்கை வெற்றிகரமாக அமையவும் இப்பூஜை உதவும்.
ஹனுமான் பூஜை
சிவபெருமானின் அவதாரமாக கருதப்படுபவர் ஹனுமான். இவர் இராமபிரானின் பக்தருமாவார். சூரிய உதயத்திற்கு முன்பாக ஹனுமான் சாலிச ஜபத்தோடு ஹனுமான் பூஜை செய்யப்படவேண்டும். ஹனுமான் பூஜை உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்மைகளை கொண்டு வரும். மனதில் இருக்கும் பயங்களை அகற்றி, பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடிய தைரியத்தை அளிக்கக்கூடியது இந்த பூஜை.
காத்யாயனி பூஜை
சக்தியின் ஓர் அவதாரம் மகா காத்யாயனி. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் காத்யாயனி பூஜை செய்யும்படியாய் சக்தி பீடங்களை நாடிச் செல்வர். திரளான நன்மைகளை பயக்கக்கூடிய முக்கியமான தேவி பூஜைகளுள் ஒன்று மகா காத்யாயனி பூஜையாகும். செவ்வாய் தோஷத்தின் செயல்பாட்டை மட்டுப்படுத்தி, திருமண வாழ்வில் இன்பத்தையும் குடும்ப வாழ்வில் நன்மைகளையும் தரக்கூடியது காத்யாயனி பூஜை.