தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் கடன் சுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தமது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார் 29 வயதேயான வைரமுத்து என்ற இளைஞர்.
இவர் அந்தப் பகுதியில் அண்ணாமலையார் என்ற பெயரில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வெகு நேரமாகியும் வைரமுத்துவின் வீடு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது.
இதனால் குடும்பத்தோடு வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள் என அக்கம்பக்கதினர் கருதியுள்ளனர். இந்த நிலையில் திங்களன்று மாலை சுமார் 6 மணியளவில் கோவை பீளமேடு பொலிசார் குறித்த அடுக்கு மாடி குடியிருப்புக்குள் நுழைந்துள்ளனர்.
பின்னர் வைரமுத்து வீட்டின் கதவை உடைக்க முயற்சிக்க அக்கம்பக்கத்தினர் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். வீட்டினுள்ளே வைரமுத்துவின் தந்தை பாலமுருகனும் (55), தாயார் லட்சுமியும் (50) கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடக்க, வைரமுத்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
அவர்களை மீட்ட பொலிசார் நடத்திய முதற்க விசாரணையில், கடன் சுமை அதிகரித்துவிட்டதால் அதைச் சமாளிக்க முடியாமல் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும்,
தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தன்னை பிரிந்து வாழ விருப்பமில்லை என்றதால் மூவரும் தற்கொலை செய்துகொள்வதாகவும் வைரமுத்து வீடியோவில் மரண வாக்குமூலம் பதிவு செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தவிரக் கடன் மற்றும் சொத்து விபரங்கள் குறித்து கடிதம் ஒன்றும் எழுதி வைத்துள்ளார் வைரமுத்து.
இதுமட்டுமின்றி, வைரமுத்துவின் சித்தி மகாலெட்சுமி திருப்பூரில் இருக்கிறார். அவருக்கு நேற்றைய தினம் ஓர் கூரியர் அனுப்பியிருக்கிறார் வைரமுத்து.
அதில் தங்களுடைய கடன் மற்றும் சொத்து விபரங்களையும், கடன் சுமை தாங்காமல் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்ற தகவலையும் எழுதி அதோடு வீட்டுச் சாவியையும் அனுப்பி வைத்திருக்கிறார்.
கூரியர் கிடைத்ததும் பதறியடித்துக் கொண்டு காவல் துறை உதவியை நாடியுள்ளார் மகாலெட்சுமி. இதனையடுத்தே, வைரமுத்துவின் வீட்டுக்கு விரைந்தது பொலிஸ்.
மூன்று பேரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடன் தொல்லையால் தன்னுடைய பெற்றோரை கொலை செய்து விட்டு வைரமுத்துவும் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.