பதினாறு வயது சிறுமி பிரவீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). யாழ்ப்பாணத்தின் புறநகரொன்று வாழ்விடம். சற்றுத்தொலைவில் பாடசாலை. பாடசாலை, தனியார் கல்வி நிலையம், வீடு என குறுகியது அவளது உலகம். மிகச்சில நண்பிகள்.
அவளது குடும்பம் மத்தியதர வர்க்க குடும்பம். பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பெற்றோர் அதிக அக்கறை வைத்திருந்திருக்கிறார்கள். அவளுக்கும், சகோதரிக்கும் வங்கி கணக்குகள் ஆரம்பித்து அதில் குறிப்பிட்ட தொகை பணம், நகை வைப்பு செய்திருந்தனர்.
திடீரென பிரவீனாவின் அக்காவிற்கு ஒரு திருமணம் முற்றானது. வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்திருந்த ஒருவனிற்கு பத்துநாளில் அவசரமாக பெண்பார்த்ததில் பிரவீனாவின் சகோதரி மனைவியானாள். அவசர அவசரமாக பதிவு திருமணம் நடந்தது.
இருபது நாளில் அந்த வீட்டில் ஒரு புதுஉறவு நுழைந்தது. வீட்டிலுள்ள எல்லோருக்கும் ஐரோப்பிய மாப்பிள்ளை ஏதோ ஒரு பரிசுப்பொருள் கொடுத்தார். பிரவீனாவிற்கு ஒரு கைத்தொலைபேசி கொடுத்தார்.
பதினாறு வயது பிரவீனாவிற்கு கைத்தொலைபேசி புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்தியது. பாடசாலை, தனியார்கல்வி நிலையம், வீடு, மிகச்சில நண்பர்கள் என இதுவரை இருந்த உலகத்திற்கு அப்பாலான புதியதொரு உலகம். மகிழ்ச்சி, கிளர்ச்சி, ஆச்சரியம், புதுமை என விரிந்தது அது.
இணையம், மொபைல் கேம் என இரண்டுநாள் தொலைபேசியுடனேயே வாழந்தாள். இரண்டாம்நாள் மாலை தொலைபேசியை மேசையில் வைத்துவிட்டு சில நிமிடங்கள் பக்கத்தில் எங்கேயோ போய்விட்டு வந்தாள். ஒரு மிஸ்ட் கோல் இருந்தது. அறிமுகமற்ற இலக்கம்.
அவளது நண்பிகள் யாரிடமும் தனி இலக்கம் கிடையாது. வீட்டிலுள்ளவர்களின் இலக்கமும் கிடையாது. தனது தொலைபேசிக்கு வந்த முதலாவது தவறிய அழைப்பை விட்டுவிடவும் மனமில்லை. அந்த தவறிய அழைப்புத்தான் அவளது மனதை நீண்டநேரம் ஆக்கிரமித்திருந்தது. என்ன செய்யலாமென்ற நீண்ட குழப்பத்தின் பின், அந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.
மறுமுனையில் ஒரு ஆண்குரல்.
முதன்முதலில் தொலைபேசி பயன்படுத்தும், பருவக்கவர்ச்சிமிக்க பதினாறு வயது மாணவி ஒருமுனையில்… தொலைபேசியில் பெண்களை வசியம் செய்யும் அத்தனை வித்தைகளையும் தெரிந்து வைத்திருந்த இளைஞன் ஒருவன் மறுமுனையில்.
பிரவீனா புதியதொரு உலகத்திற்குள் நுழைந்தாள். காலையில் நித்திரையிலிருந்து எழுப்புவது முதல் இரவு நித்திரைக்கு அனுப்புவது வரை அனைத்தையும் முகம் தெரியாத தொலைபேசி காதலன் செய்தான். வேளைக்குவேளை நேரம் தவறாமல் ‘சாப்பிட்டாச்சா’ என்ற குறுந்தகவலை தட்டிவிட்டு கொண்டிருந்தான்.
தொலைபேசியும் அன்பாக உறவை தேடித்தரும் என்று பிரவீனா நம்பினாள். நம்பிக்கைதானே காதலின் முதல்படி. முகம் தெரியாமலே இருவரும் காதலித்தனர்.
அவன் இல்லாமல் தன்னால் வாழ முடியாதென அவள் உணர்ந்தாள். அவனும் அப்படியேதான் சொன்னான்.
மிஸ்ட் கோல் வந்து இரண்டு மாதங்களின் பின் இருவரும் வீட்டைவிட்டு ஓடுவதாக முடிவு செய்தனர். தனது வங்கிக்கணக்கிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவனுடன் ஓடிச்சென்றாள்.
முதல்நாள் ஒரு விடுதியில் அவளுடன் தங்கினான். ஓரிருநாள் அவளுடன் தங்கி, அவள் கொண்டு வந்த பணத்தையெல்லாம் பறித்தெடுத்தான். அவளது வீட்டுக்கு அருகில் கொண்டுசென்று இறக்கி, அவளது தொலைபேசியிலிருந்தே அவளது பெற்றோருக்கு அழைப்பையேற்படுத்தி விடயத்தை சொல்லிவிட்டு தலைமறைவாகிவிட்டான்.
பின்னர் நடந்த வைத்திய பரிசோதனைகளில் அவள் genital warls என்ற பால்வினை நோயால் தாக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இது ஒரு உதாரணம். வடக்கில் இப்படி நிறைய கதைகள் உள்ளன என்பதுதான் அதிர்ச்சியளிப்பது. கைத்தொலைபேசிகளால் பாதிக்கப்படும் சிறுமிகளை பற்றிய கட்டுரை தரவிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றபோது, தமிழ்பக்கத்திடம் வைத்தியர் ஒருவர் தெரிவித்த பல கதைகளில் இதுவும் ஒன்று.
இளம் வயதுக்காரர்கள் மத்தியில் கைத்தொலைபேசி பாவனை அதிகரிப்பது எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்துகிறது என தொடர்ந்தும் எச்சரிக்கப்பட்டு கொண்டிருந்தாலும், பிரவீனாக்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
முழுமுதற் காரணம் பெற்றோர்கள்தான். குழந்தைகளை- குறிப்பாக பெண்பிள்ளைகளை வளர்க்கும்போது அதிக சிரத்தையெடுத்துக் கொள்ள வேண்டும். பெண்பிள்ளைகளின் பின்னாலேயே நாள் முழுவதும் சுற்றிவருவதல்ல இதன் அர்த்தம். மனிதர்களையும், சூழலையும்
எதிர்கொள்ளும் வல்லமையுடன் அவர்களை வளர்க்க வேண்டும். வயதிற்குவரும் பெண்பிள்ளைகளிற்கு தன் உடல்பற்றி மர்மங்களோ, பரபரப்புக்களோ நீடிக்ககூடாது. அனைத்தையும் பிள்ளைகளிற்கு பக்குவமாக புரிய வைக்க வேண்டும்.
புலம்பெயர்வு கலாசாரம் நம்மவர் வாழ்வில் சடுதியான மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. எல்லா வீடுகளிற்கும் தாராளமாக பணமும், மேற்கத்தைய நாகரிகமும், நவீன தொழில்நுட்ப சாதனங்களும் வருகின்றன. பக்குவப்பட்டு வளர்ச்சியடைந்த சமூகம் ஒன்றின் வாழ்க்கை முறையையும், தொழில்நுட்ப சாதனங்களையும் வேறொரு இடத்தில் பாவிக்கும் பொழுது ஏற்படும் விபத்துக்களைத்தான் நாம் தினமும் சந்திக்கிறோம்.
பேஸ்புக் மூலம் யுவதிக்கு தொல்லை, அந்தரங்கப்படம் வெளியீடு என்ற செய்திகள் இன்று நம்மத்தியில் தாராளம். இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்களின் மூலம் பெண்களிற்கு ஏற்படும் அபாயம் வடக்கில் மிக அதிகமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. வடக்கு குறும்பட நடிகைகளின் அந்தரங்க படங்கள் என நிறைய பெண்களின் அந்தரங்கபடங்கள் பல மாதங்களின் முன்னர் வெளியானது. ஆனால் அதை வெளியிட்ட குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. நவீன தொழில்நுட்ப சாதனங்களை பெண்கள், சிறுவர்களிற்கு எதிராக பயன்படுத்துபவர்கள் இந்த சமூகத்தில் உள்ளார்கள் என்பதே அச்சம் தருவதுதான்.
கைத்தொலைபேசி, பேஸ்புக் போன்றவற்றை ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கு பயன்படுத்துவது எப்படி, அவற்றால் வரும் விளைவுகள் என்னவென்பதை பிள்ளைகளிற்கு சொல்லிக்கொடுப்பது அவசியம்.
சிறுவர்கள் இளவயதில் திசைமாறி செல்வதற்கு குழந்தைகள் மீதான பெற்றோரின் கவனக்குறைவும், பெற்றோரின் சீரற்ற நடத்தையும்தான் காரணம்.
எந்தெந்த வீடுகளில் சிறுவர்கள், சிறுமிகள் துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறார்களோ, அதை செய்த காமுகனைவிட அவர்களின் பெற்றோரே அதிக பொறுப்பேற்க வேண்டிய முதன்மை குற்றவாளிகள்!