வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பல பெண்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த ஒருவரை பேராதனை பொலிஸார் இன்று (31.08.2018) கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, 35 பெண்களிடம் தலா 65 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் முல்கம்பள பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் கண்டியில் அமைந்துள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக மொனராகலை பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை தவிர தங்காலை, வெல்லவாய, பண்டாரவளை, பதுளை, கலேன்பிந்துனுவெவ, குட்டிகல, எம்பிலிப்பிட்டிய, அங்குனுகொலபொலஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.






