முறைகேடாக செயல்பட்ட பார்கள்: சீல் வைத்த அதிகாரிகள்

கோவையில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் முறைகேடாக செயல்பட்டு வந்த 76 டாஸ்மாக் பார்களுக்கு கலால் வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கூடங்கள் இயங்கி வருகின்றன.மதுபானக்கடைகளுடன் இயங்கி வரும் இந்த மதுபான கூடங்கள் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும்.ஆனால் கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் மதுக்கூடங்கள் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக கட்டணத்தை செலுத்தாமல் இருந்து வந்துள்ளன.

இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவின் பேரில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் முறைகேடாக செயல்பட்டு வந்த சுமார் 76 டாஸ்மாக் மதுக்கூடங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றிற்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதன்படி கோவை பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கூடத்திற்கு கலால் வரித்துறை துணை ஆணையர் பாலசுப்பிரமணி தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலசுப்பிரமணியன்,கோவை மாவட்டம் முழுவதும் இதுபோன்று முறைகேடாக இயங்கி வரும் மதுபான கூடங்களுக்கு சீல் வைக்க 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழுவினர் இன்று ஒரே நாளில் அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் அர்சுக்கு செலுத்த வேண்டிய தொகையை மூன்று தினங்களுக்குள் அபராத தொகையுடன் சேர்த்து செலுத்தும் பட்சத்தில் தொடர்ந்து பார் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.