பல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!

ருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி சற்று விலகிச் செல்கிறார் என்றால், உங்கள் வாயிலிருந்து நாற்றம் வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம்! குடும்பத்தில் இருப்பவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் சுட்டிக்காட்டும்போதுதான் ஒருவருக்கு வாய் நாற்றம் ஏற்படுவது  தெரியவரும். எனவே, தினமும் ஒரு முறையாவது, வாய் நாற்றம் ஏற்படுகிறதா என்று சோதித்துப் பார்ப்பது நமக்கும் நல்லது, நமக்கு அருகிலிருப்பவர்களுக்கும் நல்லது. முக்கியமாக உடலில் இருக்கும் நோய்களை அறிவிப்பதற்கான குறிகுணமாகக்கூட வாய் நாற்றம் ஏற்படலாம்.

வாய் நாற்றம்

பெரும்பாலான மருந்தகங்களில் கண்களைக் கவரும் வகையில் பளிச்சென தென்படுவது, வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் ‘மவுத் வாஷ்களும்’, ’மவுத் ஃப்ரெஷ்னர்களும்’ தான். இவை வாய்ப் பகுதியில் உண்டாகும் நாற்றத்தை தற்காலிமாகத் தடுக்கவே பயன்படுகின்றன. வாய் நாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறியாமல், வாழ்க்கை முழுவதும் மவுத் வாஷ்களையே நம்பிக்கொண்டிருப்பதுதான் தவறு.

வாய் நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன, வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம்?

வாய் சுகாதாரம்

காலையில் எழுந்ததும் இருக்கும் வாய் நாற்றம், பல் துலக்கியதும் மறைந்துவிடும். ஆனால், பல் துலக்கிய பிறகும், நாள் முழுவதும் நாற்றம் நீடிக்கிறது என்றால், முதலில் கவனிக்க வேண்டியது, வாய்ப் பகுதியைத்தான். வாயில் நாற்றம் ஏற்படுவதற்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் கசிதல், பற்சொத்தை, பல் இடுக்குகளில் சீழ் பிடிப்பது, நாக்கைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவை முக்கியக் காரணிகளாகும்.

பற்கள்

சாப்பிட்டு முடித்தவுடன் பல் இடுக்குகளில் தங்கும் உணவுத் துகள்கள், வாய்ப் பகுதியிலிருக்கும் பாக்டீரியாக்களுடன் கூட்டு சேர்ந்து நாற்றத்தை உருவாக்கும். குறிப்பாக இடைவெளி அதிகமுள்ள பற்கள் கொண்டவர்கள், பற்களுக்கிடையே உணவுப் பொருள்கள் தங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். நாவறட்சி அதிகமிருந்தாலும், வாயில் நாற்றம் உண்டாகும். நாவறட்சி ஏற்படாமல் இருக்க, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

மற்ற காரணங்கள்

பீனிச நோய்கள் (Sinusitis), மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டை அழற்சி, நுரையீரல் பாதை தொற்றுகள், வயிற்றுப் புண், செரியாமை, அடிக்கடி உணவு எதுக்களித்தல் போன்ற காரணங்களால் வாயில் நாற்றம் ஏற்படலாம்.  பூண்டு, வெங்காயம் சேர்ந்த உணவுகளைச் சாப்பிடுவதாலும், சில வகையான மருந்துகளை நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்வதாலும்கூட வாயில் நாற்றம் உண்டாகலாம். புகை மற்றும் மதுப்பழக்கம் உடையவர்களுக்கு, பிரத்தியேக நாற்றம் உண்டாவதைத் தவிர்க்க முடியாது.

இன்சுலின் சரியாகச் சுரக்காத சர்க்கரை நோயாளர்களின் உடல் குளூக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்தாது. உடலில் இருக்கும் கொழுப்பை உடைத்து ஆற்றலாக மாற்ற முயற்சிக்கும். அப்போது உருவாகும் `கீடோன்கள்’ வாயில் நாற்றத்தை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடர்ந்து வாயில் நாற்றம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். சர்க்கரை  நோயாளிகளுக்கு அதிக அளவில் தாகம் இருக்கும்போது, நாவறட்சி ஏற்பட்டு வாய் நாற்றம் உருவாகலாம். முதியவர்களுக்கு எச்சில் சுரப்பு குறைவதால், நாவறட்சி ஏற்படும்.

இவைத் தவிர்த்து, கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போதும், புற்றுநோய் அல்லது காசநோய் இருக்கும்போதும் வாயில் நாற்றம் ஏற்படலாம். அதற்காக வாய் நாற்றம் ஏற்பட்டவுடன் `நமக்குக் கல்லீரல் அல்லது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்குமோ…’ என்று பதற்றப்பட வேண்டாம். அடிப்படை காரணம், வாய் சுகாதாரம் சார்ந்ததாகவே இருக்கும். வாய்ப்பகுதியைச் சுத்தமாகப் பராமரித்தும் வாயில் நாற்றம் தொடர்ந்தால், மருத்துவரின் ஆலோசனை அவசியமாகிறது.

வாய் நாற்றம்

தீர்வு என்ன?

காலை,மாலை என இருமுறை பல்துலக்க வேண்டும். நாக்கின் அடியில் கிருமிகள் சேர்ந்து நாற்றம் உண்டாக்கும் என்பதால், நாக்கையும் முறையாகச் சுத்தப்படுத்துவது முக்கியம். சாப்பிட்டவுடன் வாய்க்கொப்பளிக்கும் பழக்கம் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். சிறுவயது முதலே குழந்தைகளுக்கு வாய்க் கொப்பளிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கலாம். டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏலம், சீரகம், லவங்கப்பட்டை, புதினா, கொத்தமல்லி போன்றவை பன்னெடுங்காலமாக நம்மிடையே இருக்கும் இயற்கை `மவுத் ப்ரெஷ்னர்கள்’.

கிராம்பு, ஏலம், சாதிபத்திரி, காசுக்கட்டி சேர்ந்த தாம்பூலம் தரிக்கும் முறை, வாயில் ஏற்படும் நாற்றத்தைப் போக்குவதுடன் செரிமானத்தைத் தூண்டும். எச்சில் சுரப்பை அதிகரித்து நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். எச்சில் சுரப்பு குறைந்து நாவறட்சி இருப்பின் அக்கரகாரம், மிளகு, திப்பிலி போன்ற மூலிகைகளை வாயிலிட்டு சுவைத்தால் எச்சில் சுரப்பு அதிகரிக்கும். வாய்ப் பகுதியில் மையமிட்டிருக்கும் கிருமிகளை அழிக்க எச்சில் சுரப்பைவிட சிறந்த பொருள் எதுவுமில்லை.

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைக் கொண்டு வாய் கொப்பளிக்கலாம் (ஆயில் புல்லிங்). திரிபலாசூரணத்தை வெந்நீரில் சேர்த்து வாய்க் கொப்பளிப்பதும் சிறந்த பலனளிக்கும். செரிமானத் தொந்தரவுகள் இருந்தால், நிவர்த்தி செய்வது முக்கியம். நீண்ட நாள்களாக புகை, மது அருந்துபவர்கள் நேரடியாக வாயில் நாற்றம் ஏற்படுகிறதா அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதால் வாய் நாற்றம் ஏற்படுகிறதா என்பதைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.