எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த முல்லைத்தீவு மீனவர் சர்ச்சையின் பின்னாலுள்ள கோடீஸ்வர வர்த்தகர்!

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகளை நேற்றிரவு சிங்களவர்கள் தீமூட்டி நாசகார செயல் புரிந்ததில், சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான சொத்தழிவை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. வாடிகளிற்கு தீமூட்டினார்கள் என இன்று மதியமளவில் மூன்று சிங்கள மீனவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களை தடைசெய்ய வேண்டுமென தமிழ் மீனவர்கள் கோரிவருவதன் எதிரொலியாகவே இந்த சொத்தழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பலகாலமாகவே முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களிற்கு தலையிடியாக இருந்து வரும் சிங்கள கோடீஸ்வரர் ஒருவரே இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நாயாற்றில் தங்கியிருக்கும் சிங்கள மீனவர்கள் அனைவரையும் அந்த கோடீஸ்வரரே பாதுகாக்கிறார், அவரது அனுமதிப்பத்திரத்தின் மூலமே மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள் என மக்கள் கூறுகிறார்கள்.

எனினும், இந்த நாசகார செயலின் பிரதான சூத்திரதாரியை பொலிசார் கைது செய்யவில்லையென பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

யார் இந்த எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த?

எரிக்கப்பட்ட படகு

பொதுமக்களின் குற்றச்சாட்டையடுத்து தமிழ்பக்கம் இந்த விவகாரத்தில் தீவிர அவதானம் செலுத்தி, இதன் பின்னணியை ஆராய்ந்தது. இந்த விவகாரத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும், சம்பவங்களும் நமக்கு கிடைத்தன. அவற்றை இங்கு பதிவிடுகிறோம்.

நீர்கொழும்பை சேர்ந்த எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த 2013 இல் முல்லைத்தீவு நாயாற்று பகுதிக்கு வந்தார். கேகாலையை சேர்ந்த இவர், ஏற்கனவே நீர்கொழும்பில் கடற்றொழிலில் கொடிகட்டி பறந்த கோடீஸ்வர வர்த்தகர் இவர். அப்போது அரசியல் செல்வாக்கின் மூலம், அவர் நாயாற்றிற்கு வந்தார்.

தற்போது ஓய்வுபெற்ற கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் ஜெயவர்த்தனவின் இளைய சகோதரர் இவர்.

நாயாற்றில் கடற்கரையோரமாக தமிழர் ஒருவருக்கு சொந்தமாக இருந்த 6 எக்கர் காணியை விலைகொடுத்து வாங்கினார். இதன்பின், நாயாற்றில் தனக்கு காணி சொந்தமாக இருப்பதாக கூறி, வாடியமைக்க அனுமதி பெற்றுள்ளார். அவர் வாடியமைக்க மகாவலி அபிவிருத்தி திணைக்களமும் அனுமதித்துள்ளது!

நாயாற்று பகுதி மகாவலி எல் வலயத்திற்குள் வருவதால், அவருக்கான அனுமதியை மகாவலி அபிவிருத்தி திணைக்களம் வழங்கியுள்ளது. மகாவலி திட்டத்தால் தமிழர் பகுதியில் எப்படியான ஆபத்து வரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். விவசாயத்துடன் தொடர்புடைய மகாவலி அபிவிருத்தி திணைக்களம், எப்படி வாடியமைக்க அனுமதியளிக்கும்?

இந்த வாடி அனுமதியுடன் தற்போது நாற்பதிற்கும் அதிக மீன்பிடி படகுகளையும், இதற்கான தொழிலாளர்களையும் நாயாற்றில் தங்க வைத்து தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நீர்கொழும்பில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து, வாடியில் தங்க வைத்துள்ளார். இவர்கள் சுருக்கு வலை தொழிலையே மேற்கொள்கிறார்கள். முன்னைய மகிந்த ராஜபக்ச காலத்தில், அரசியல் செல்வாக்கின் அடிப்படையில்- சில சிங்கள மீன் வர்த்தகர்களின் நன்மைக்காக முல்லைத்தீவில் தமிழ், சிங்களவர்கள் 25 பேருக்கு சுருக்கு வலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சுருக்கு வலை தொழிலை தமிழ் மீனவர்களால் செய்ய முடியாது. காரணம் வளப்பற்றாக்குறை. அது அதிக வளமுள்ள பெரு வர்த்தகர்களாலேயே செய்ய முடியும். வளம் மட்டுமல்ல, ஆழ்கடல் சுழியோடலிலும் தமிழ் மீனவர்களிற்கு பரிச்சயம் இல்லை. தற்போது, அனுமதி பெற்றுள்ள சிங்கள சுருக்குவலை முதலாளிகளுடன் இணைந்தே, அனுமதி பெற்றுள்ள தமிழர்கள் சுருக்குவலை தொழில் செய்கிறார்கள்.

சுருக்குவலை என்றால் என்ன?

முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் கரைவலை தொழிலே காலம்காலமாக நடந்து வருகிறது. அதற்கான வளமே அவர்களிடம் உள்ளது.

எனினும், தென்னிலங்கையிலுள்ள மீன்பிடி பெரு வர்த்தகர்கள், 40, 50 படகுகளின் மூலம் சுருக்குவலை தொழிலை தமது பகுதிகளில் செய்தார்கள்.

சுருக்குவலையென்பது ஆழ்கடலில் மீன்பிடித்தல். ஆழ்கடலில் உள்ள மீன்கூட்டத்தை அடையாளம் கண்டதும், அந்த இடத்தில் புவியியல் அமைவிடத்தை ஜி.பி.எஸ் மூலம் அடையாளப்படுத்தி, ஏனைய படகுகளின் மூலம் அந்த இடத்தை சுற்றிவளைப்பார்கள். அந்த மீன்கூட்டத்தை சுற்றிவளைத்து வலைகளால் முற்றுகையிட்ட பின், படிப்படியாக வலைகளை சுருக்கி, மீன்கூட்டத்தை சிறிய இடத்திற்குள் சுற்றிவளைப்பார்கள்.

மீன்கூட்டம் சிறிய இடத்திற்குள் வளைக்கப்பட்டதும், அந்த இடத்தில் டைனமற் வீசப்படுகிறது. அல்லது குளோரின் வீசப்படுகிறது. இதன் மூலம், மீன்கள் மயக்கமடைந்து மிதக்கின்றன. உடனே சுழியோடிகள் கடலில் குதித்து, அந்த மீன்களை தூக்கி படகில் போட்டு விடுகிறார்கள்.

சுருக்குவலை தொழிலை, கடலில் பெரு நிறுவனமாக இயங்குபவர்களாலேயே பெருமெடுப்பில் செய்ய முடியும். சுருக்குவலை முற்றுகையில் சிக்கி தப்பித்த மீன்கூட்டங்கள் மீண்டும் அந்த பகுதியை நாடுவதில்லை. தமது இருப்பித்தை மாற்றி கொண்டு விடுகின்றன. இதனால் சுருக்குவலை படிப்படியாக தடைசெய்யப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் பெரு முதலாளிகள் சுருக்குவலை தொழிலை செய்து குறுகிய காலத்தில் பணமீட்டிய போதும், பெரும் மீன்கூட்டங்கள் தமது இருப்பிடத்தை நகர்த்த தொடங்கியுள்ளன. வடக்கை நோக்கி படையெடுப்பதன் உண்மையான காரணம் இதுதான்.

எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த

நாயாற்றில் அமைக்கப்பட்டுள்ள சுனித் நிஷாந்தவின் வாடியிலிருந்து ஆரம்பத்திலிருந்தே சட்டவிரோதமான மீன்பிடி முறைகளின் மூலமே மீன்பிடிக்கப்பட்டு வருகிறது. அதை தடுக்க முனைந்த கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் மீது, வாடியிலிருந்தவர்கள் தாக்குதல் முயற்சி செய்து, அது இப்பொழுது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது.

2016 இல் அந்த பகுதி கிராமசேவகர் யேசுரட்ணம் என்பவர் சுனித் நிஷாந்தவின் வாடியிலிருந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

எனினும், முல்லைத்தீவில் யாராலும் அடக்க முடியாத முரட்டு காளையாக சுனித் நிஷாந்த தனது தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார்.

முல்லைத்தீவில் அவரது சட்டவிரோத மீன்பிடி முறைகளை பற்றி வவுனியா மேல்நீதிமன்றத்தில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அரசியல், பண பலத்தால் ஐந்து வருடமாக நாயாற்றை கட்டியாண்டு வருகிறார் சுனித் நிஷாந்த. முல்லைத்தீவில் சிங்கள மீனவர்களிற்கும், தமிழ் மீனவர்களிற்கும் மோதல், முறுகல் என அடிக்கடி செய்திகள் வருகின்றன. உண்மையில்- அரசியல், பண பலமுள்ள ஒரு சிங்கள மீன் வர்த்தகரிற்கும், தமிழர்களிற்கும் மோதல் என்பதே சரி.

முல்லைத்தீவிலுள்ள மீன்பிடி சங்கங்களின் ஒற்றுமையின்மையை தனக்கு வாய்ப்பாக அந்த வர்த்தகர் பயன்படுத்தி வருகிறார். மீன்பிடி சங்கங்களின் ஒற்றுமையின்மையும் அவரை வெளியேற்ற முடியாமல் தடுக்கும் காரணங்களில் ஒன்று.