அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இருக்கிறது மோனோவி. 2010ஆம் ஆண்டு முதல் இந்த நகரில் ஒரேயொரு வீடு மட்டுமே இருந்து வருகிறது. இந்த வீட்டிலும் ஒரேயொரு மனிதர்தான் வசித்து வருகிறார். 84 வயது எல்சி எய்லர் என்ற பெண்தான் இந்த நகரின் ஆளுநர், கணக்காளர், பொருளாளர், நூலகர், உணவகம் நடத்துபவர் என அனைத்துமாக உள்ளார்.ஒவ்வோர் ஆண்டும் இந்த நகருக்கு ஆளுநர் தேர்தல் நடைபெறுகிறது. தானே தேர்தலில் நின்று, தானே ஓட்டுப் போட்டுக்கொள்கிறார் இவர்!
இந்த நகருக்குத் தேவையான சாலை, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். ஆண்டுக்கு 32 ஆயிரம் ரூபாய் வரி செலுத்துகிறார். அரச ஆவணங்களில் இது எவருமற்ற ‘பேய் நகரம்’ என்று எழுத விடாமல் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.‘1930ஆம் ஆண்டு மோனோவியில் 150 பேர் மட்டுமே வசித்த காரணத்தால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அப்போது 3 மளிகைக் கடைகள், சில உணவகங்கள், சிறைச்சாலை இருந்தன. பின்னர் இந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இங்குள்ளவர்கள் பெரு நகரங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். 1960ஆம் ஆண்டு இங்கிருந்த தேவாலயத்தில் என் அப்பாவின் இறுதிச் சடங்குதான் கடைசியாக நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு தபால் நிலையம், மளிகைக் கடைகள், பள்ளிக்கூடம் எல்லாம் வரிசையாக மூடப்பட்டன.
1980ஆம் ஆண்டு நகரின் மக்கள் தொகை 18ஆக இருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நானும் என் கணவரும் மட்டுமே எஞ்சியிருந்தோம். 2004ஆம் ஆண்டு கணவரும் மறைந்துவிட்டார். 14 ஆண்டுகளாக நான் மட்டும் வசித்து வருகிறேன். நான் ஒருபோதும் தனிமையை உணர்ந்ததில்லை. வாரத்தில் 6 நாட்களும் உணவகத்தைத் திறந்து வைத்திருப்பேன். காலை 9 மணிக்கு உணவகத்தைத் திறந்தால் இரவு 9 மணிக்குதான் மூடுவேன்.
என் கணவரின் தனிப்பட்ட சேமிப்பான 5 ஆயிரம் புத்தகங்களை வைத்து, ஒரு நூலகத்தை நடத்தி வருகிறேன். மது அருந்துபவர்கள், உணவு சாப்பிடுபவர்கள், நூலகத்துக்கு வருகிறவர்கள் என்று சுற்றுலாப் பயணிகள் வந்துகொண்டே இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் எனக்கு உண்டு.
ஒரே மனிதர் வசிக்கும் நகரம் என்று மோனோவி பெயர் பெற்றுவிட்டதால், உலகம் முழுவதிலுமிருந்து கூட மக்கள் வருகிறார்கள்.விருந்தினர் புத்தகத்தில் ஏராளமானவர்களின் கையொப்பங்கள் இருக்கின்றன. இங்கிருப்பதே எனக்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்கிறார் எல்சி எய்லர்.