கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் பலர் ஜெயிப்போமா? மாட்டோமா? என்ற சந்தேகத்திலேயே உள்ளனர்.
எது எப்படியிருந்தாலும் ஒரு சிலர் இந்த எதிர்மறைக் கருத்துக்களை எல்லாம் தகர்த்தெரிந்து இந்தத் தொழில்களின் மீதான பார்வையையே மாற்றிக்காட்டியுள்ளனர்.இது போன்ற ஒரு கதை தான் நாம் இப்போது பார்க்கப்போவது.
பேஷன் டிசைனிங்-கிற்குப் புகழ்பெற்ற நிப்ட் கல்லூரியில் பட்டம் பெற்று ஆடு வளர்ப்பில் ஈடுபட முடிவெடுத்த ஸ்வேதா வின் வெற்றிக் கதையைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
படித்தவர் இந்த வேலையைச் செய்வதா..?
இன்று பட்டம் பெற்றுப் பெரு நிறுவனங்களில் வேலை செய்யும் பல விருப்பம் இல்லாமலும் அதிக மன அழுத்தத்துடனே அந்த வேலையைச் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு வேறு தொழில் ஆரம்பிக்கவும், சொந்த ஊர் பக்கம் வந்து செட்டில் ஆகவுமே அதிகளவில் விரும்புகின்றனர்.
இவ்வாறான முடிவிலிருக்கும் ஒருவரிடம் உறவினர்கள், நெருங்கியவர்கள் கேட்கும் ஓரே கேள்வி படித்தவர் இந்த வேலையைச் செய்வதா..? என்பது தான்.
தடைகளைத் தாண்டி…
இந்த ஒரு கேள்வியிலேயே பலரது மன உறுதி தளர்ந்து விடும். இதனால் அடுத்த முயற்சி எடுப்பதற்குத் தயங்கிய பிடிக்காத வேலையையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால், இத்தகைய தடைகளைத் தாண்டி வெற்றிபெற்றவர் தான் ஸ்வேதா.
திருமணம்
கடந்த-2015 ஆம் ஆண்டில் திருமணமாகி கணவருடன் பெங்களூருக்குக் குடிபெயர்ந்த ஸ்வேதாவின் பயணம் அப்போது தான் ஆரம்பமானது. அந்தக் காலகட்டத்தில் அவர் ஒரு வெற்றிகரமான பேஷன் டிசைனராகத் திகழ்ந்தார். பெங்களூருக்கு வந்த பின்னர் வீட்டில் எதுவும் செய்யாமல் வெட்டியாக இருப்பது பிடிக்காமல், சொந்தமாகத் தொழில் ஆரம்பிப்பதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார்.
முதல் அனுபவம்
ஸ்வேதா தனது கணவருடன் ஒரு முறை ஆட்டுப் பண்ணைக்குச் சென்ற போது ஆடுகளுடன் நேரத்தைச் செலவிட விரும்பினார். இதன் பின்னர், அடிக்கடி அந்தப் பண்ணைக்குச் செல்லும் அவர் ஆடு வளர்ப்பிலுள்ள சிக்கல்களைப் புரிந்து கொண்டார்.
முதலீடும், இடம்பெயர்தலும்சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தபடியால், ஒரு நகரத்தில் இந்தத் தொழிலை ஆரம்பிக்க முடியாது எனத் தெரிந்து வைத்திருந்தார் ஸ்வேதா. எனவே, பெங்களூரிலுள்ள சுகபோகமான வாழ்க்கையைத் துறந்து, உத்தரகாண்ட மாநிலத்தின் டேராடூன் அருகிலுள்ள ராணிபோக்ரி என்ற சிறு கிராமத்திற்குச் சென்றார்.
அங்கு ஆடு வளர்ப்புத் தொழிலை ஆரம்பிக்கத் தனது மொத்த சேமிப்பையும் முதலீடு செய்தது மட்டுமல்லாமல் தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடனையும் பெற்றார்.
அதிர்ச்சி
தனது முடிவை நெருக்கமானவர்களிடம் ஸ்வேதா கூறியவுடன் முதலில் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அவருடைய கல்வித் தகுதியைப் பார்த்து ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் பணியில் அவர் சேர்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.ஸ்வேதா ஆடு வளர்க்கும் தொழிலை துவங்குவதாக யோசனை தெரிவித்தவுடன் பெரும்பாலானோர் இவர் மிகப்பெரிய தவறை செய்வதாக எச்சரித்தனர்.
வங்கிக் கடன்
ஸ்வேதா தொழில் ஆரம்பிக்க முடிவெடுத்த பகுதியில் பல வன விலங்குகள் வாழ்வதால் அவை ஆடுகளைத் தாக்குமோ என்ற பயமும் அவருக்கு இருந்தது. ஆனாலும் இவர் மனத்திடத்தைக் குலைக்கும் வகையில் எதையும் அனுமதிக்காமல் வங்கிக்கடன் பெற்று ஆரம்பத்தில் 250 ஆடுகளுடன் தொழிலை ஆரம்பித்தார்.
இவரது பண்ணையில் ஜம்னாபாரி ரூ டோடாபாரி முதல் சிரோகிரூபர்பாரி வரை நாட்டு ஆடு ரகங்கள் மட்டுமே உள்ளன.
வர்த்தகம்
ஆடுகளுக்கு முறையான பாதுகாப்பும், ஊட்டச் சத்தும் கிடைப்பதை உறுதி செய்துகொள்கிறார் ஸ்வேதா.
சில நேரங்களில் அவரே ஆடுகளைச் சந்தைகளுக்குக் கூட்டிச் செல்கிறார். பாரம்பரிய சந்தையுடன் சேர்த்து, இணையத்தளங்களில் கூட ஆடுகளை விற்கிறார்.
முதல் வருடமே அசத்தல்
கடந்த ஆண்டு ஸ்வேதா 25 இலட்சம் ரூபாவை ஆடுகள் விற்று முதலாகப் பெற்றார். மேலும் மற்றவர்கள் சொந்தத் தொழில் ஆரம்பிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் தனது பண்ணையில் பயிற்சி வகுப்புகளையும் நடாத்த ஆரம்பித்துள்ளார்.
இனி தொடர் வளர்ச்சி தான்…
இந்நிலையில் ஸ்வேதா தற்போது உத்தரகாண்டின் மற்றப் பகுதிகளுக்கும் தனது தொழிலை விரிவுபடுத்தும் பணியில் இறங்கியுள்ளார். இதன் மூலம் இனி எதிர்வரும் ஆண்டுகளில் ஸ்வேதாவின் வருமானம் பல மடங்கு உயருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மன நிறைவு
பிடிக்காத வேலையில் கோடி ரூபா சம்பாதித்தாலும் இருக்காத மனநிறைவு பிடித்த தொழிலில் இலட்சம் ரூபாவைச் சம்பாதித்தாலும் வந்துவிடும். இதனை, இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் 10 நாள் பசியில் இருப்பவனுக்குச் சாப்பாடு கிடைப்பதில் இருக்கும் மன நிறைவு, வயிறு நிறைந்தவர்களுக்குப் பிரியாணி கிடைத்தாலும் கிடைக்காது.
மனத்திற்குப் பிடித்ததைச் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி.
எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஸ்வேதா…
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற நமது முன்னோர் வாக்கிற்கு இணங்கச் செய்யும் தொழிலை விரும்பிச் செய்தால் வாழ்வின் உயரங்களை அடைய முடியும் என்பதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஸ்வேதா. அவரது தொழில் சிறக்க நாமனைவரும் வாழ்த்துவோம்.