இரண்டு மாத குழந்தையை காவு வாங்கிய ஆம்புலன்ஸ் கதவு!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் கதவுகள் திறக்க முடியாமல் பூட்டிக்கொண்டதால், இரண்டு மாதக் குழந்தை ஆம்புலன்ஸ் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்பிகா குமார் என்பவர் தமது இரண்டு வயது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரயில் மூலம் டெல்லியில் இருந்து ராய்பூர் சென்றுள்ளார்.

ரயில் நிலையம் வந்து சேர்ந்ததும் சஞ்சீவினி எக்ஸ்பிரஸ் என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்துள்ளார்.

ஆம்புலன்ஸில் ராய்பூர் மருத்துவமனை சென்று சேர்ந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்புலன்ஸின் கதவை திறக்க முடியாமல் தவித்துள்ளனர். பலமுறை முயன்றும் கதவை திறக்க முடியாததால் அந்த வாகனத்தின் ஜன்னலை உடைத்து குழந்தையை வெளியேற்ற முடிவு செய்துள்ளார் அம்பிகா குமார்.

ஆனால் ஆம்புலன்ஸ் அரசு சொத்து என்பதால் சேதப்படுத்த வேண்டாம் என அங்குள்ள ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே நீண்ட நேரமாகப் பலர் போராடியும் கதவுகளைத் திறக்க முடியவில்லை. இதனால் சுமார் 2 மணி நேரம் காற்று இல்லாமல் உள்ளேயே இருந்ததால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை குறித்த ஆம்புலன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளதுடன், குழந்தை ஏற்கெனவே இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.