பாட்டி வைத்தியத்தில் இந்த 6 நோய்களுக்கு மருந்து!

பாட்டி வைத்தியம் என்பது நம்முடைய முன்னோர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த, உணவு மருந்து என்னும் அடிப்படையிலான இயற்கை மருத்துவ முறைகள் ஆகும்.

இந்த பாட்டி வைத்தியத்தின் மிக அடிப்படையான விஷயமே நாம் சாப்பிடும் உணவையே நம்முடைய நோயைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துவது தான்.

நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு எது நன்மையோ அதையே தங்களுடைய உணவு முறையாகப் பின்பற்றி வந்தனர். நாமும் நம்முடைய பாரம்பரிய உணவு முறையையே இப்போது தனி மருத்துவ முறையாகப் பின்பற்றி வருகிறோம்.

வாழைக்காய்

வாழைக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருந்தாலும், வாழைக்காயை சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை உண்டாகும் என்னும் ஒரு வதந்தி இருக்கிறது.

ஆனால் நம்முடைய முன்னோர்கள் வாழைக்காயை பல்வேறு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். வாழைக்காய் பாட்டி வைத்தியத்தில் எதற்கெல்லாம் பயன்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்

வாழைக்காயில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. நோஞ்சானாக இருப்பவர்கள் அடிக்கடி உணவில் வாழைக்காயை சேர்த்துக் கொண்டால் உடல் தேற ஆரம்பிக்கும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும். என்னென்ன பிரச்னைக்கு வாழைக்காயை எப்படி சாப்பிடலாம்?

நீரிழிவு

வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால், பசி மிக விரைவாக அடங்கி விடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைக்காயை சாப்பிடலாமா என்ற சந்தேகம் இயல்பாக எழுவது வழக்கம் தான். ஆனால் நீரிழிவு நோயுள்ளவர்கள் வாழைக்காய் கச்சல் செய்து சாப்பிடுங்கள்.

அதாவது வாழைக்காயில் சீரகமும் மிளகும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

ரத்த விருத்திக்கு

ரத்த விருத்திக்கு வாழைக்காயை சமைத்து சாப்பிட்டு வருவது நல்லது. வாழைக்காயின் மேல் தோலை மட்டும் சீவி விட்டு, சமைப்பது தான் சிறந்த முறை. அப்போது தான் நார்ச்சத்து முழுமையும் நம்முடைய உடலுக்கு வந்து சேரும்.

வாழைக்காயின் மேல் தோலை மெலிதாக சீவி எடுத்து அதை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி வைத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் உளுந்து, சிறிது சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு 4 பல், உப்பு, ஒரு நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றைச் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும். அது மட்டுமல்லாது, வயிறு இரைச்சல், வாயில் எச்சில் ஊறுதல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப் போக்குக்கு பத்திய சாப்பாடு சாப்பிடுகிறவர்கள் வாழைப் பிஞ்சினை நெய்யில் வதக்கி, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வாருங்கள். வயிற்றுப் போக்கு உடனடியாக நிற்கும்.

ஏப்பம்

சிலருக்கு அடிக்கடி தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அதற்கு மிக முக்கியமான காரணமே அஜீரணக் கோளாறு தான்.

அப்படி அஜீரணக் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், வாழைக்காயினை சின்ன சின்ன வில்லைகளாக வெட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வர அஜீரணக் கோளாறு நீங்கும்.

அதேபோல், உலர்த்திய வாழைக்காயுடன் சிறிது உளுந்து, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து இட்லி பொடி, சாதப்பொடி போலவும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வரலாம். வயிற்றுக் கடுப்பு தீரும்.