தனது உரையினால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து பதவியை இராஜினாமா செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு யாழ். குடா நாட்டில் ஆதரவுக் கரம் ஓங்கியுள்ளது.
அதற்கமைய, ‘தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் அன்று உயிர்துறந்தார் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தார் ‘தமிழ்த்தலைவி’ விஜயகலா’ என எழுதப்பட்ட வாசகங்களுடன் யாழின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என குறிப்பிடப்பட்டு இந்த சுவரொட்டிகள் யாழ். பேருந்து நிலையம் உள்ளிட்ட யாழின் பிரதான பொது இடங்களில் காணக்கூடியதாக இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர், வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என தெரிவித்திருந்தார்.இந்த விடயத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகள் பூதாகரமாக்கியதுடன், குறித்த விவகாரம் விஜயகலாவிற்கு எதிரான விமர்சனங்கள் குற்றச்சாட்டிற்கும் வழிவகுத்தன.

இதனை தொடர்ந்து தனது அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு எழுத்து மூலமான இராஜினாமாவை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நேற்று மாலை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






