பிரபாகரன் இறந்துவிட்டார்,போராட்டாம் மௌனித்து விட்டது, புலிகளின் நிதியை வன்னி மக்களுக்கு வழங்க வேண்டும் – அருட்தந்தை இம்மானுவேல்

தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் மௌனிக்கப்பட்டு விட்டது.

ஈழப்போராட்டத்திற்காக புலம்பெயர்ந்த தேசங்களில் சேகரிக்கப்பட்ட நிதியை போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குங்கள் என கூறியுள்ளார்
அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார். யாழ் ஆயர் இல்லத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- 2009 உடன் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டாம் மௌனித்து விட்டது.

பிரபாகரன் இறந்து விட்டார். போராட்டத்திற்காக புலிகள் புலம்பெயர் நாடுகளுடன் தொடர்புகளை பேணி, பெருமளவு நிதி சேகரித்திருந்தனர்.

போராட்டம் முடிந்துள்ள நிலையில் அந்த பணம் இன்று வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் புலிகளும், வன்னி மக்களும் இன்றும் வறுமையில் உள்ளனர்.

அவர்களின் வறுமையை போக்க அந்த நிதியை சரியாக பாவிக்க வேண்டும்.

நான் வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதில் உண்மையில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் என்னை நேரில் சந்தித்தபோது, நீங்கள்தானாம் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறப்படுகிறது என என்னிடம் கூறினார்.
நான் அரசியல்வாதியல்ல. அப்படியான எண்ணமும், நோக்கமும் எனக்கில்லை என கூறினேன்.

நான் மக்களிற்கு பொதுச்சேவையையே செய்ய விரும்புகிறேன். அரசியல்வாதியல்ல. இவ்வாறு கூறினார்.

அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பு ஊடகங்களால் இம்மானுவேல் அடிகளார் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக ஒரு கதையை பரப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.