ஜேசிபி இயந்திரத்துக்கு நன்றி சொன்ன குட்டியானை! – வைரல் வீடியோ

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை ஒன்றை மக்கள் ஒன்றுசேர்ந்து மீட்கும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 15 தேதி, தாய்லாந்து நாட்டின் சந்தபுரி எனும் இடத்தில் உள்ள ரப்பர் தோட்டத்திற்குள் குட்டியோடு ஒரு தாய் யானை வந்துள்ளது. அப்போது, குட்டி யானை தவறுதலாக அங்கிருந்த கிணற்றில் விழுந்துவிடுகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த தாய் யானை, குட்டி யானை விழுந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து பிளிறுகிறது. ஏதோ நடந்திருக்கிறது என்பதை அறிந்த கிராம மக்கள், தாய் யானை இருந்த பகுதிக்கு வருகிறார்கள்.

மக்கள் வந்ததை அறிந்த தாய் யானை, ரப்பர் தோட்டத்தைச் சுற்றி இருந்த மின்சார வேலியைத் தொட்டு, மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துவிடுகிறது. இதைக் கவனித்த கிராம மக்கள், உடனே மின்சாரத்தைத் துண்டிக்கிறார்கள்.

சில நிமிடங்களில் மின்சாரம் தாக்கிய யானை எழுந்து குட்டி யானை இருந்த இடத்தை நோக்கி ஓடுகிறது. அதைப் பின்தொடர்ந்து செல்லும் மக்கள், குழியில் விழுந்து கிடந்த குட்டி யானையைக் கண்டுபிடிக்கிறார்கள். உடனே, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்கப் போராடுகிறார்கள்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்புப் பணியால், குட்டி யானை மீட்கப்பட்டு வெளியே கொண்டுவரப்படுகிறது. கிணற்றிலிருந்து வெளியே வந்த யானை, ஜேசிபி இயந்திரத்தின் தலைப் பகுதியைத் தொட்டு நன்றி சொல்லிவிட்டு தாயை நோக்கி ஓடுகிறது.

பின்னர் தாய் யானை, குட்டியை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறது.பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருக்கும் அந்த வீடியோ, இப்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகிவருகிறது.