தமிழக அரசு சொந்த மக்கள் என்றுகூட பாராமல் ஸ்டெர்லைட்டுக்காகப் போராடிய 13 பேரைச் சுட்டுக் கொன்றது. இந்த அச்சமே இன்னும் மக்கள் மனதைவிட்டு மறையவில்லை. சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம், 8 வழி பசுமைச் சாலை ஆகிய பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தொடந்து போராடியும் வருவதால் சேலத்தில் அசாதாரண நிலை உருவாகியிருக்கிறது.
விவசாயிகளைத் தாண்டி தற்போது அரசியல் கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று இரவு கோவையிலிருந்து ராணுவ பீரங்கி கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் தொடர்ந்து போராட்டத்தால் பதற்றமாக இருக்கிறது. விவசாயிகளை அச்சுறுத்தவே இந்தச் சூழ்நிலையில் ராணுவ பீரங்கி கொண்டு வரப்பட்டுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தார்கள்.
ஆனால், மாவட்ட ஆட்சித்துறை அலுவலர்கள், “1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தப் பீரங்கி பயன்படுத்தப்பட்டது. 41.5 டன் எடை உள்ள டி.55 விஜயேந்திரா என்ற ரக பீரங்கி. இது டெல்லி ராணுவ முகாமில் வைக்கப்பட்டது. கடந்து சில நாள்களுக்கு முன்பு கோவை ராணுவக் கண்காட்சிக்குக் கொண்டு வரப்பட்டது. தற்போது சேலம் மக்களின் பார்வைக்காக இங்கு கொண்டு வந்திருக்கிறோம்’’ என்றார்கள்.
வீரபாண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.செல்வம், ”இந்த ஆட்சி சர்வதிகார கொடுங்கோல் ஆட்சியாக இருக்கிறது. அப்பாவி விசாயிகளின் நிலத்தை அவர்களிடம் கேட்காமலேயே, நில அளவை செய்து முட்டுக்கல் போடுகிறது. விவசாயிகள் கதறலும் கண்ணீரும் தற்போது அனைத்து மக்களையும் பாதித்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் போராட்டக் களத்தில் குதித்திருக்கும் நேரத்தில் சேலத்துக்கு பீரங்கி கொண்டு வந்திருப்பது பொதுமக்களை அச்சுறுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கெல்லாம் மக்கள் யாரும் பயப்பட மாட்டார்கள்” என்றார்.






