கோத்தா மீது அதீத நம்பிக்கையில் இருக்கும் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர்

கோத்தபாய ராஜபக்ஸ மீது தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக்ஸ ஒரு விடயத்தை இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய ஒருவர். இதனால் அவர் மீது எமக்கு அதீத நம்பிக்கை இருந்தது.

முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்பிலும், இந்த நாட்டை ஆக்கிரமிக்க அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைள் குறித்தும் நாம் உண்மைகளை வெளிக் கொண்டுவந்த போது அவற்றை சிறந்த முறையில் புரிந்து கொண்டார்.

உலமா சபையையும், எம்மையும் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடினார். இருதரப்பினரதும் பிரச்சினைகளை கேட்டறிந்து பின்னர் அது குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது 30 வருட யுத்தம் இப்போது தான் முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில் இன்னுமொரு யுத்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இவர் மாத்திரம் தான் இப்பிரச்சினையை புரிந்துகொண்டு தீர்வு காண நடவடிக்கை எடுத்தார். ஏனைய அரசியல் தரப்பினர் சகலரும் இது போன்ற பிரச்சினைகளின் போது அரசியல் லாபம் அடைய முயற்சித்தனர்.

அல்லது அரசியல் லாபங்களை அடைந்துகொள்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் பிரச்சினைகளை உருவாக்கினர் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.